Ads Area

ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய ஆசிரியை பணியிட மாற்றம்..! மாணவர்களும், பெற்றோரும் ஆசிரியருக்கு ஆதரவாக போர்க்கொடி.

ஒட்டாவா,

கனடாவில் மதரீதியிலான குறியீடுகள் எதையும் பொது வெளியில் வெளிப்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது. ‘பொது சேவை ஊழியர்களான வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள் போன்றோர் மதம் சார்ந்த குறியீடுகளை தாங்கள் பணிபுரியும் இடங்களில் வெளிக்காட்டக்கூடாது’ என்பதே அந்த சட்டம் சொல்லும் செய்தி.

இந்நிலையில், அதனை மீறும் வகையில் இஸ்லாமிய பெண் ஆசிரியை ஒருவர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றதால் அவரை பணியிட மாற்றம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பதேமா அன்வாரி கனடாவின் செல்சியா ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். அவர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றதால், அந்த பணியிலிருந்து நீக்கப்பட்டு அதே பள்ளியில் வேறு பணியிடத்துக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கியூபெக் மதச்சார்பின்மை சட்டத்தை மீறியதற்காக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த சர்ச்சைக்குரிய சட்டம் கனடாவில் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த சட்டம் கடும் ஆட்சேபனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. சிறுபான்மையின மக்களை தாக்குவதாக இந்த சட்டம் உள்ளது என எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்த நிலையில், சமீபத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த ஆசிரியைக்கு ஆதரவாக மாணவர்களும் பெற்றோர்களும் பச்சை ரிப்பன்களை பள்ளியின் வளாகத்தில்  தொங்கவிட்டு தங்கள் ஆதரவை வெளிக்காட்டினர். மேலும், கடிதம் எழுதும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து, கடிதங்களை  சட்டவல்லுனர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அனுப்ப உள்ளனர்.

ஆனால் இதற்கு எதிர்வினை காட்டியுள்ள கியூபெக் தலைவர் பிராங்காய்ஸ் லெகால்ட்,  ‘இந்த சட்டம் சமமானது மற்றும் நியாயமானது’ என்று தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எந்த ஒரு மனிதரும் அவர்கள் அணியும் உடையினாலோ அல்லது மத நம்பிக்கையினாலோ அவர்களது வேலையை இழக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe