ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்களின் தனிப்பட்ட குடும்ப வழக்குகளை தீர்ப்பதில் நிபுணத்துவம் பெற்ற புதிய குடும்ப நீதிமன்றத்தை அபுதாபி நீதித்துறையின் (ADJD) துணைச் செயலாளர் யூசுப் சயீத் அல் அப்ரி அபுதாபியில் திறந்து வைத்துள்ளார்.
அபுதாபியின் ஆட்சியாளர் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாதவர்களின் தனிப்பட்ட விஷயங்களை நிர்வகிக்கும் தனிப்பட்ட அந்தஸ்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிபுணத்துவம் மற்றும் திறன்களுக்கான மிகவும் கவர்ச்சிகரமான இடமாக அபுதாபியின் நிலையை உயர்த்தும் வகையிலும் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும் வகையிலும், முஸ்லிமல்லாதவர்களுக்கான குடும்ப தகராறுகளைத் தீர்ப்பதற்கு நெகிழ்வான மற்றும் விரிவான நீதித்துறை செயல்பாடுகளை அபுதாபி குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அபுதாபியில் இந்த புதிய நீதிமன்றத்தை நிறுவுவது அமீரகத்தின் துணைப் பிரதமரும், ஜனாதிபதி விவகார அமைச்சரும் மற்றும் அபுதாபியின் நீதித்துறையின் தலைவருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யானின் உத்தரவுகளுக்கு இணங்க, அபுதாபியின் நீதித்துறை அமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியே என்றும் யூசுப் சயீத் அல் அப்ரி விளக்கியுள்ளார்.
மேலும் இந்த புதிய நீதிமன்றத்தில், வெளிநாட்டினரின் சட்ட நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கும், நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் குடும்ப வழக்குகள் தொடர்புடைய அனைத்து படிவங்களும், நடைமுறைகளும் அரபு மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளாக இருக்கும் என்றும் அல் அப்ரி குறிப்பிட்டுள்ளார்.