Ads Area

ஆடம்பர திருமணத்தை தவிர்த்து மகளின் திருமணத்துடன் 5 பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்த தம்பதி.

 திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் தலாயி பகுதியை பூர்வீகமாக கொண்ட சலீம் மற்றும் அவரது மனைவி ரூபீனா, இந்த தம்பதி தங்களது மகள் ரமீசாவின் திருமணத்தோடு சேர்த்து மேலும் 5 பெண்களின் திருமண செலவுகளை ஏற்று அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் 2 திருமணங்கள் இந்து முறைப்படியும், 3 திருமணங்கள் இஸ்லாமிய முறைப்படியும் நடத்தப்பட்டன. 

ரமீசாவின் தந்தை சலீம் ஆரம்பத்தில் இருந்தே வரதட்சணை வாங்காத ஒருவரையே தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். மேலும் தனது மகளின் திருமணத்தை எளிமையான முறையில் நடத்த வேண்டும் என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார். 

இதன்படி கேரள மாநிலம் வயநாடு, எடச்சேரி, கூடலூர், மலப்பபுரம் மற்றும் மேப்பயூர் பகுதிகளைச் சேர்ந்த 5 குடும்பங்களை அவரே தேர்வு செய்து அந்த குடும்பங்களில் உள்ள 5 பெண்களின் திருமண செலவுகளை சலீம் ஏற்றுக்கொண்டுள்ளார். தங்களது மகள் ரமீசாவின் திருமணம் நடைபெற்ற அதே நாளன்று, அந்த 5 பெண்களின் திருமணத்தையும் சலீம்-ரூபீனா தம்பதியினர் நடத்தி வைத்துள்ளனர். 

முனவர் அலி ஷிஹாப் தலைமையில் எளிமையான முறையில் திருமண விழா நடைபெற்றது. திருமணத்தின் போது 5 மணப்பெண்களும் ஒரே விதமான சேலையை அணிந்திருந்தனர். சலீம் தனது மகள் உள்பட ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் 10 சவரன் தங்கம் வழங்கினார். மதங்களைக் கடந்து நடைபெற்ற இந்த திருமண நிகழ்வு கேரள மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe