(எஸ்.அஷ்ரப்கான்)
வடக்கு, கிழக்கு இணைப்பை ஏற்க முடியாது. தமிழ் கட்சிகள் கிழக்கு மாகாணம் வேறு. வடக்கு மாகாணம் வேறு என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ்க்கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் கொள்கையடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, 13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்பதை எங்களினால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் மாகாண சபைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பலரும் என்னைச் சந்தித்து தமிழ்க்கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும், இந்தியப்பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணங்கள் தொடர்பிலும் கேள்வி கேட்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தைகளுக்கு கிழக்கிலுள்ள எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்படாத சூழ்நிலையில், அப்பேச்சுவார்த்தையின் கருப்பொருளை நாங்கள் அறிந்து கொள்ள முடியாதுள்ளது.
இருந்தாலும், தமிழ்க்கட்சிகளின் பேச்சுவார்த்தையில் எங்களின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டிருப்பதனால் அது தொடர்பிலான தெளிவுகளை எங்களினால் பெற வேண்டியுள்ளது.
முஸ்லிங்களின் நலன் தொடர்பில் மக்கள் பிரதிநிதியான நாங்கள் கரிசனையுடன் நடந்து கொள்ள வேண்டும். எங்களின் கட்சித்தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு அப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கின்றவர் என்ற ரீதியில் பல விடயங்ககளை குறுந்செய்தியினூடாக கேட்டிருந்தேன்.
இந்தப்பேச்சுவார்த்தை இறுதிநிலையைத்தொட முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுடனும், கட்சி முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் தலைவரிடம் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் மற்றும் ஏனைய பாகங்களிலுள்ள முஸ்லிம்களின் நிலைகள் தொடர்பில் நான் எடுத்துரைக்கவுள்ளேன்.
இவ்விடயம் தொடர்பில், கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலுள்ள பதற்றத்தையும், சந்தேகத்தையும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ள தமிழ்க்கட்சிகளுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு கிழக்கு மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் எனக்கிருக்கிறது.
அவர்கள் இந்தியப்பிரதமருக்கு அனுப்பவுள்ள ஆவணத்தில் கையெழுத்திடும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அறிகிறேன்.
இவ்விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ள தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களிடமும், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் போன்றோரிடம் அவ்வாணத்திலுள்ள விடயங்களை கிழக்கு மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டுமென்பதை நாங்கள் கூறி வைக்க விரும்புகின்றோம்.
1987இலும் முஸ்லிங்களுக்கு இதே நிலை தான் இருந்தது என்பதையும் வடக்கு, கிழக்கிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆவணத்தின் நகல் பார்வைக்காக கூட வழங்கப்படவில்லை.
எங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்படி அந்த ஆவணத்தில் மிகப்பிரதானமாக சுயநிர்ணய உரிமை, சமஸ்டி சம்பந்தமாக இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்தான 13ம் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்பது தொடர்பில் நிறைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
எங்களைப்பொறுத்தமட்டில் தலைவர் அஸ்ரப் மிகத்தெளிவாக 13ம் திருத்தச்சட்டம் வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாதென்று கூறியதுடன், 13ம் திருத்தச்சட்டம் மறைந்த பெருந்தலைவர் சட்டமுதுமாணி எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் முற்றாக நிராகரித்த ஒரு விடயம்.
35 வருடங்களுக்குப் பின்னர் அந்தச்சட்டமூலத்தைப் பார்க்கின்ற போது அது தமிழ் மக்களையும் திருப்திப்படுத்தவில்லை. தமிழ்த்தலைவர்களில் ஒருவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் பகிரங்கமாகவே தமிழர்களுக்கு அதில் தீர்வில்லையென்று அறிவித்துள்ளனர். அதேபோன்று தான் நாங்களும் கூறுகிறோம். இதை முஸ்லிம்களுக்கான தீர்வாக எடுத்துக்கொள்ள முடியாது.
முஸ்லிம் மக்கள் பற்றி அந்த ஒப்பந்தத்தில் ஒரு வார்த்தையேனும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பாரத பிரதமருக்கு தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 13 அல்ல அதற்கும் மேல் பல சட்டங்கள் வரையப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில், வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை எட்ட வேண்டும். இதை ஒரு நியாயமான கோரிக்கையாக முன்வைக்கிறோம்.
அந்த ஆவணத்தில் முஸ்லிம் சமூகத்திற்குச் சாதகமான விடயங்கள் என்னென்னவுள்ளதென்பது தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கிலுள்ள எம்.பிக்களை அழைத்தாவது பேச வேண்டும். 13இல் வடக்கு, கிழக்கை இணைப்பது தொடர்பில் மிகத்தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கிழக்கில் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழும் சூழ்நிலையில், முஸ்லிம் கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமானால் கிழக்கு மாகாணம் தனியாக இருக்க வேண்டுமென்ற அம்சத்தையாவது உள்ளடக்க வேண்டும்.
அது சாத்தியப்படாமல் போனால், கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும். இந்த ஆவணத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் கிழக்கு வேறாகவும், வடக்கு வேறாகவும் இருக்க வேண்டுமென்பதையும் ஒவ்வொரு மாகாணங்களும் தனித்தனியாக இருக்க வேண்டுமென்பதையும் தமிழ்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதனைத் தவிர்த்து இணைந்த வடகிழக்கில் சமஸ்டி தீர்வென்பது கிழக்கு முஸ்லிம்களின் உரிமைக்களை முற்றாக மறுப்பதுடன், வடக்கு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறும் விடயமாக நோக்க நேரிடும்.
இதில், வடகிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களையும் நாங்கள் கவனத்திலெடுத்து அவர்களின் எதிர்காலத்தையும், பிரச்சினைகளையும் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.
சஹ்ரானின் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பலத்த சங்கடங்களை அனுபவித்து வருகிறார்கள். முஸ்லிம்களின் வாழ்வியல், மத, கலாசார விடயங்கள் இன்று பாரிய சிக்கல்களை அனுபவித்து வரும் சூழ்நிலையில், தமிழ்க்கட்சிகள் முஸ்லிம்களை அனுதாபக்கண் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் அரசியல் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னர், தாக்குதலுக்குப்பின்னர் என்ற நிலை உருவாகியுள்ளது. இக்காலகட்டத்தில் இந்தியப்பிரதமருக்கு அனுப்பும் ஆவணத்தில் முஸ்லிம்களின் ஒப்புதலையும் பெறுதல் என்பது தெற்கு சிங்கள அரசியலில் பாரிய அதிர்வலைகளை முஸ்லிம்களுக்கெதிராக உருவாக்கும் அபாயமுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு நிறைந்தவர்களும், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுமான தினேஷ் குணவர்தன, விமல் வீரவம்ச போன்றோர் இரத்தக்களறி உருவாகும் வாய்ப்புள்ளதாகவும், மேலும் பல விடயங்களையும் தெரிவித்திருந்தார்கள்.
எனவே, சிங்களத்தலைவர்கள் முஸ்லிம் மக்களின் நிலைப்பாடறிய ஆவலாகவுள்ளார்கள். பிழையான முடிவுகளை முஸ்லிம் தலைவர்கள் எடுத்தால் அது சிங்கள மக்களுடன் வாழும் முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்புள்ளது என்றார்.