எம்.எஸ். எம்.நூர்தீன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமையல் எரிவாயு (லீற்றோ) தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சமையல் எரிவாயு (கேஸ்) சிலிண்டர் போத்தல்களுடன் மக்கள் சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்குச் சென்று சிரமப்படுவதைக் காண முடிகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை லீற்றோ சமையல் எரிவாயு மட்டக்களப்பு மாவட்ட ஏக விநியோகஸ்தரான எஸ்.எஸ்.எம்.சொல்கார் நிறுவனத்தின் காத்தான்குடியிலுள்ள களஞ்சியசாலைக்கு முன்பாக லீற்றோ சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக வெற்றுப் போத்தல்களுடன் நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்து நின்றனர்.
இதன் போது அங்கு காத்தான்குடி பொலிசாரும் வரவழைக்கப்பட்டதுடன், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிஸ் குழு அங்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டு விபரங்களைக் கேட்டறிந்து கொண்டனர்
இதன் போது, களஞ்சியசாலையிலிருந்த இன்று காலை கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை வரிசையில் நின்ற பொதுமக்களில் நூறு பேருக்கு பொலிசாரின் உதவியுடன் விநியோகம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாளார்ந்தம் 2,500 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும் தற்போது மிகக்குறைவாகவே இது வருவதாகவும், இதனால் பலத்த சிரமங்களை எதிர்நோக்குவதாவும் லீற்றோ சமையல் எரிவாயு மட்டக்களப்பு மாவட்ட ஏக விநியோகஸ்தரான எஸ்.எஸ்.எம்.சொல்கார் நிறுவனத்தின் உரிமையாளர் எ.எல்.எச்.எம்.இப்றாகீம் தெரிவித்தார்.
மக்கள் தினமும் இங்கு வந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களைப்பெற சிரமப்படுவதாகவும் தொடர்ச்சியாக தினமும் பத்தாயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தந்தால் அதனை விநியோகம் செய்வதன் மூலம் தட்டுப்பாடு ஓரளவு நிவர்த்தியாகுமெனவும் தெரிவித்தார்.