Ads Area

பணவீக்கம் என்றால் என்ன? சிம்பிளாக சொல்வதென்றால் உங்களிடம் பணம் இருக்கும் ஆனால் வாங்க பொருள் இருக்காது.

Sivachandran Sivagnanam

பணவீக்கம் என்றால் என்ன?

சிம்பிளாக சொல்வதென்றால் உங்களிடம் பணம் இருக்கும் ஆனால் வாங்க பொருள் இருக்காது.

அதாவது பத்து பேர் பாண் வாங்க கடைக்கு போகிறீர்கள். ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் உள்ளது. மற்றவர்களிடம் 500 ரூபாய் உள்ளது. கடையில் ஒரு இறாத்தல் பாண் மட்டுமே உள்ளது. ஆயிரம் ரூபாய் உள்ளவன் அதைக்கொடுத்து பாணை வாங்கிக்கொண்டு போவான். மற்றவர்களிடம் காசு இருந்தும் பாண் கிடைக்காது.

இது ஏன் ஏற்படுகிறது?

அரசாங்கத்துக்கு விரலுக்கேத்த வீக்கம் இல்லாட்டி பணவீக்கம் வரும்.

இலங்கை ரூபாய் என்பது இலங்கை அரசாங்கத்திடம் உள்ள சொத்து/ வருமானத்திற்கு ஏற்பவே அச்சடிக்க வேண்டும். 

இலங்கையில் கோதுமை இல்லை. வெளிநாட்டில் இருந்தே கோதுமை இறக்குமதி செய்ய வேண்டும்..வெளிநாடுகளிடம் இலங்கை ரூபாய் கொடுத்து கோதுமை வாங்க முடியாது.வெளிநாட்டு பணம் கொடுத்தே கோதுமை வாங்க முடியும். அதற்காக இலங்கை வெளிநாட்டுப் பணத்தை அச்சடிக்கவும் முடியாது.

வெளிநாட்டு நாணயத்தை இலங்கை வேறு வழிகளில் உழைக்க வேண்டும்.

எவ்வளவு வெளிநாட்டுப் பணத்தை உழைக்க முடிகிறதோ அதற்கு ஏற்பவே இலங்கை பணத்தை இலங்கை அச்சடிக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு பாண் செய்யக்கூடிய கோதுமையை இறக்குமதி செய்ய போதுமான வெளிநாட்டுப் பணத்தையே  இலங்கை உழைத்துள்ளது என வைத்துக் கொள்வோம். 

ஆனால் அவர்கள் பத்து இலங்கையர்களுக்குத் தேவையான பணத்தை தங்கள் இஷ்டத்திற்கு அச்சடித்து விடுகிறார்கள். இப்போது இலங்கையர் பத்துப்பேர் கையில் காசு இருக்கும். ஆனால் ஒருத்தர் வாங்கவே  பாண் இருக்கும். இதுவே பண வீக்கம்.

இலகுவாக விளங்கப்படுத்த இந்த இலகுபடுத்தப்பட்ட உதாரணத்தைப் சொன்னேன்.

இப்போதும் பலர் கொரோனா நிலமை காரணமாகத்தான் இலங்கையின் நிலமை இப்படி ஆனது. கொரோனா நிலமை சரியானதும் இலங்கை பழைய நிலைக்கு வந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

இது சாத்தியமா?

கொரோனா நிலவரம் கட்டுப்பாடானதும் இலங்கை வருமானம் அதிகரிக்கும்தான். ஆனால் வருமானம் குறைவாக இருந்தபோது எக்கச்சக்கமான கடனை வாங்கி வைத்துள்ளார்கள். வரப்போகிற வருமானத்தின் பெரும்பகுதி வாங்கிக் குவித்த கடனின் வட்டிகளையும், காலாவதியாகப் போகும் கடனின் முதலையும் கட்டவே செலவாகப்போகிறது. போதாக்குறைக்கு இலங்கை அரசு அளவுக்கதிகமாக பணத்தை அச்சடித்து விட்டுள்ளது. 

எல்லாவற்றையும் விட புற்று நோயில் இருந்து காப்பாற்றுகிறேன் என உரங்களை தடை செய்ததால் இனி கொஞ்ச காலத்திற்கு உள்ளூர் உற்பத்திகளான மரக்கறிகளைக்கூட  இறக்குமதி செய்யதேவை ஏற்படும் . 

இது எல்லாம் சேர்ந்து இலங்கை இரண்டு வருடத்திற்கு முன்பிருந்த நிலையை அடைவதையே சாத்தியமில்லாமல் செய்யப்போகிறது.

உலக நாணய நிதியம் என்கிறார்களே, அது என்ன?

இதுவும் கடன் தான். ஆனால் இலகுதவணைக் கடன்.

கடனென்றால் சும்மா தூக்கி கொடுக்க மாட்டார்கள். பல கட்டுப்பாடுகள் விதிப்பார்கள்.  உதாரணமாக போன மாதம் உலக நாணய நிதியம் கடன் கொடுத்திருந்தால், நேற்று நிதியமைச்சர் வந்து அரச ஊழியர்களுக்கு 5000 கொடுப்பனவு என்று கெத்து காட்டி இருக்க முடியாது. உலக நாணய நிதியம் வந்துசெவிட்டையில் கொடுத்து 5000 இலவசமாக கொடுக்க முன் அதை எப்படி உழைப்பாய் என சொல்லு என்றிருக்கும்.

ஒரு மாவட்ட மக்களையே ஏமாற்றி, கொஞ்சம் மூளை கெட்டதுகளை கூப்பிட்டு கல்லடி பீச்சில் சோறு குடுத்து நீங்க எல்லாம் ஊடகவியலாளர்கள்டா என ஏமாத்தி,  ஒரு வெப்சைட்டை தொடங்கி அரசாங்கம் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு கொடுக்கிறது என ஏமாத்த முடியாது.

உலக நாணய நிதியம் வந்து செவிட்டையில கொடுக்கும். 

அதுக்காக உலக நாணய நிதியம் ஒன்றும் மிகப்பெரிய உத்தமர்கள் இல்லை. 

அது அமெரிக்காவின் கைப்பிள்ளை. இலங்கை அவர்களிடம்  உதவி கேட்டால், அதன் முதல் நோக்கமாக சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதே இருக்கும்.

எல்லாமே அரசியல். இலங்கை உலக நாணய நிதியத்தின் செல்ல வேண்டும் என்பதே மேற்குலகின் விருப்பம்.  அதனால்தான் எல்லா வகையிலும் இலங்கையை மேற்குலகம் இறுக்கிப் பிடிக்கிறது. 

இந்தியா பிரதமர் இலங்கை நிதி அமைச்சரை சந்திக்காமல் அனுப்பியதும் அதனால்தான்.

மறுபுறம் சீனா இலங்கை உலக நாணய நிதியத்திடம் செல்ல கூடாது என இறுக்கி பிடிக்கிறது.

இந்த நெருக்குவாரத்தால் பாதிக்கப்படபோவது அப்பாவி மக்களே.

அடுத்த உலக யுத்தம் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதன் மூலமே நடைபெறப்போகிறது. அதற்கான ஒரு மைதானம் இலங்கையாக இருக்கப்போகிறது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe