Ads Area

சாய்ந்தமருது பெண்கள் சந்தை மழை வெள்ளத்தினால் பாதிப்பு - வியாபாரிகள் கவலை.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

சாய்ந்தமருது பெண்கள் சந்தை மழை வெள்ளத்தினால் தினமும் பாதிக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பெண்கள் சந்தை இப்பகுதியில் பிரபலமிக்க சந்தைத் தொகுதியாகும்.

இங்கு மீன், இறைச்சி உள்ளிட்ட மரக்கறி வகைகள் தினமும் விற்பனை செய்யப்படுகின்றன.

அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் இச்சந்தையை நாடி தத்தமது தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.

இச்சந்தை தற்போது அப்பகுதியில் பெய்கின்ற அடைமழை காரணமாக ஒழுக்கு ஏற்பட்டுள்ளதுடன், குறித்த சந்தை வெள்ள நிலையினால் அவலநிலையை அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இங்கு எவ்விதமான அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வியாபாரிகள் மழைக்காலங்களில் தமது வியாபாரங்களைச் செய்ய முடியாது முடி வைத்துக்கொண்டிருக்கும் பரிதாப நிலையினையும் காணக்கூடியதாகவுள்ளது.

எனவே, இதற்கான தீர்வினை உரிய தரப்பினர்  மேற்கொள்ள வேண்டுமென வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதே வேளை, அம்பாரை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால் மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலப்பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர் உள்ளிட்ட பிரதேசங்களிலேயே இவ்வாறு அடைமழை பெய்து வருகின்றது.  

அம்பாரை, கல்முனை பிரதான வீதிகல் உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைப்பகுதியில் சில வியாபார நிலையங்களிலும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

இந்நிலையில், மக்களின் அன்றாட நடவடிக்கைளும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

நேற்று ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று காலை வரை நீடித்து வரும் நிலையில், தொடர்ந்தும் மழை நீடிக்குமேயானால், தாழ்நிலப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இடம்பெயரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe