Ads Area

கொட்டும் மழையின் இடையிலும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200வது கொடியேற்ற விழா ஆரம்பமானது !

 நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜுன் லாபிர்

நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால்  நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவின் 200  வது கொடியேற்று விழா நேற்று (04) கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ .அஸீஸ் தலைமையில் ஆரம்பமானது.

சீரற்ற காலநிலை காரணமாக மழை பெய்து கொண்டிருந்தமையையும் பொருற்படுத்தாமல் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர்,  நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது . 200 வது கொடியேற்று விழா நினைவு படிகம் இதன் போது திகாமடுல்லா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் , கொடியேற்று தினத்தில் இருந்து  தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான  எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கிவைக்கப்படவுள்ளது. இதேவேளை 200  வது கொடியேற்று விழாவையொட்டி முத்திரை ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் அமைச்சர் டலஸ் அலகப்பெருமாவினால் எதிர்வரும் ஆறாம் திகதி வெளியிடப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து பொது மக்கள் இவ் கொடியேற்ற விழாவை பார்வையிட வருகை தந்ததை  காணமுடிந்தது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா,  அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம். எஸ்.எம். நிசார், வக்பு சபை உறுப்பினர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை. செனவிரத்ன, அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி ஏ.சி. சமிந்த லமாகோவா, அடங்களாக பொலிஸ் உயரதிகாரிகள், நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், ஊர்மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe