Ads Area

மக்கள் காங்கிரஸ் ஆவணத்தில் கையெழுத்திடாது என அறிவிப்பு : கிழக்கின் தனித்துவம் பறிபோனால் போராட வீதிக்கு இறங்குவோம்.

 நூருல் ஹுதா உமர்

தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியப்பிரதமருக்கு அனுப்ப தயாரிக்கும் ஆவணங்களில் கிழக்கு மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அந்த ஆவணத்தில் முஸ்லிங்களுக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் இல்லாமல் இருப்பதாகவும் கூறி அந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் "கிழக்கு கேடயம்" ஊடக மாநாட்டை நேற்று (04) மாலை கல்முனையில் நடத்தினர். அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது,

தமிழ் கட்சிகள் சில இணைந்து இந்தியப்பிரதமருக்கு அனுப்பவுள்ள கடிதம் ஏன் அனுப்பப்படுகின்றது? அந்த கடிதத்தில் உள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பில் வடக்கு கிழக்கில் உள்ள பொதுமக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதனை தெளிவுபடுத்தவேண்டியது இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் உட்பட முஸ்லிங்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு பெரிய பங்குள்ளது. இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிங்களின் அபிலாஷைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். ஒழித்து மறைத்து செய்யப்படும் இந்த ஆவணத்தில் கூட முஸ்லிங்களின் இருப்புக்கு ஆபத்தான விடயங்கள் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். இந்த கடிதத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் மக்களின் பிரதிநிதிகளுக்கோ அல்லது சமூக தலைவர்களுக்கோ தெளிவுபடுத்தப்படவில்லை என்பது மிகப்பெரிய அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

இது தொடர்பில் பூரண விளக்கம் தராமல், எங்களுக்கு விளங்கப்படுத்தாமல் இந்த ஆவண நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டால் கிழக்கில் வாழும் முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களை ஒன்றுதிரட்டி அவர்களுடன் இணைந்ததாக மக்கள் பிரதிநிதிகளையும் ஒன்றாக வரவழைத்து எந்த நாடுகளுக்கு எல்லாம் இந்த ஆவணம் செல்கிறதோ அந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் பேரணியை நடத்தி இந்த ஒப்பந்தத்தை மக்கள் நிராகரிப்பதாக பகிரங்கமாக அறிவிக்கும் தேவை வந்துவிடும் என்பதை இதில் சம்பந்தப்பட்டுள்ள தலைமைகளுக்கு தெரிவித்து கொள்கிறோம் என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் இந்த ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்தார்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எச்.எம். அப்துல் மனாப், எமது நாட்டில் முஸ்லிங்களுக்கு இருக்கும் கஷ்டங்களுக்கு மத்தியில் இப்போது புதிய பதட்டமாக இந்திய பிரதமருக்கு அனுப்பும் வடகிழக்கை இணைக்க வலியுறுத்தும் 13ம் திருத்தத்தை அமுல்படுத்தக்கோரும் கடித விவகாரம் வந்துள்ளது. இதில் கிழக்கின் புத்திஜீவிகள், அரசியல்பிரமுகர்கள், சமூக நல ஆர்வலர்கள் எனப்பலரும் விழிப்படைய  வேண்டும். மு.கா உதயமாக காரணமாக இருந்த ஒப்பந்தத்தை மீண்டும் அமுல்படுத்த மு.கா தலைவர் ஹக்கீம் ஆதரவளிப்பதாக நாங்கள் அறிகிறோம். நாங்கள் இதனை முன்னின்று செய்பவர்களிடம் கோருவது ஒன்றைத்தான். அதுதான் எங்களுக்கு இது தொடர்பில் தெளிவூட்டுங்கள் என்பது. கடந்த 2021.12.23 அன்று நடந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட கூட்டத்தில் இந்த ஆவணத்தை ஆதரித்து மக்கள் காங்கிரஸ் கையெழுத்திடுவதில்லை என்று தீர்மானித்துள்ளோம். மக்கள் காங்கிரசின் முடிவுகள் ஜனநாயக ரீதியாக உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஒட்டியதாகவே இருக்கும். அதனடிப்படியில் தலைவரின் முடிவும் அதுதான். கிழக்கு மக்கள் அரசியல் விடயங்களை செய்ய அரசியல்வாதிகளை மட்டும் நம்பிக்கொண்டிராமல் புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் முன்வந்து தீர்வுகளை பெறவேண்டும் என்றார்.

இங்கு கலந்து கொண்டு கருத்துவெளியிட்ட காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சாணக்கியமிக்க தலைவராக அவரது ஆதரவாளர்களினால் நோக்கப்படுபவர். அவரது முடிவுகள் சமூகத்திற்கு ஆபத்தாக அமையாது என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள். இந்த விடயம் தொடர்பில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்காமல் கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்கு உயர்பீடத்தை கூட்டி முடிவெடுத்தது போன்று இந்த விடயத்திற்கும் அவர் உயர்பீடத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும். சமூகத்திற்கு ஆபத்து வருமாக இருந்தால் மக்கள் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டி வீதிக்கு இறங்க கூட தயாராக உள்ளோம். வடகிழக்கு இணைந்திருந்த போது அதிகமாக பாதிக்கப்பட்ட மாளிகைக்காட்டை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் 85-90 காலப்பகுதியில் அந்த கோரமுகத்தை அனுபவித்திருக்கிறோம்.

கிழக்கிலுள்ள மக்களிடம் கலந்துரையாடல் செய்யாமல் முடிவுகளை எடுத்தால் பாரிய பிரச்சினைகள் வரும் அபாயம் உள்ளது. கிழக்கு மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய தேவை அரசியல்தலைவர்களுக்கு இருக்கிறது. இந்தியாவில் முஸ்லிங்களை கொன்றுகுவிக்கும் இனவாத சிந்தனையை உச்சமாக கொண்ட நரேந்திர மோடிக்கு இலங்கை தமிழ் பேசும் மக்களுக்காக நியாயம் கேட்டு கடிதம் அனுப்புவது இலங்கை முஸ்லிங்களுக்கு சிறந்த விடயமல்ல. இந்த விடயத்தில் சகலரும் நிதானமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe