(நூருல் ஹுதா உமர்)
அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக சாய்ந்தமருதை சேர்ந்த சாலின் மௌபியா என்பவர் மக்கள் பணிமனையினால் பெயரிடப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் தேசிய காங்கிரசின் தலைமையகமான கிழக்கு வாசலில் வைத்து இன்று (02) தனது பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில், சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை முன்வைத்து, சாய்ந்தமருது முஹையத்தின் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் மக்கள் பணிமனையினால் தோடம்பழ சின்னத்தில் களமிறக்கப்பட்டு சுயேச்சைக்குழு சார்பில் 19ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு சார்பில் கடந்த மூன்றாண்டுகளாக உறுப்பினராக இருந்த முஹர்ரம் பஸ்மீர், அப்பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இராஜினாமா செய்திருந்தார். நிண்டகாலமாக நிரப்பாமல் இழுபறியில் இருந்துவந்த அவர் இராஜினாமா செய்த வெற்றிடத்தை நிரப்பும் வகையிலையே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சாத்தியப்பிரமாண நிகழ்வில் தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவரும், வக்பு சபை உறுப்பினருமான டாக்டர் ஏ. உதுமாலெப்பை, சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம், செயலாளர் அப்துல் மஜீத் (ரோஷன் மரைக்காயர்), கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஆசிரியர் ஏ.ஆர்.ஏ. அஸீஸ், ஏ.ஆர்.எம். அஸீம், என்.எம். றிஸ்மீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.