தமிழ் மொழி போராட்டத்தில் உடும்பு பிடியாய் மனோ கணேசன்..
உலகில் உள்ள மொழிகளில் தமிழ் மொழி பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மொழியாகும். இலங்கை சிறுபான்மையின மக்களில் அதிகமானவர்கள் தமிழையே தாய் மொழியாக கொண்டுள்ளனர். அதிலும் வடக்கு, கிழக்கில் வாழும் அதிகமான மக்கள் தமிழ் மொழியை மாத்திரமே பேசுவதை அவதானிக்க முடியும். அவர்களுக்கு சிங்கள மொழி அறிவு மிக குறைவாகவே காணப்படும். இதன் காரணமாக மொழி உரிமையின் அவசியம் பல இடங்களில் உணரப்படும்.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழ் மொழி உரிமை எமக்குள்ளது. அந்த மொழி உரிமை பல இடங்களில் மறுக்கப்படுவது வெளிப்படையான ஒன்று. இம் மொழி உரிமையானது எமக்கு அலங்காரமானதல்ல, அது அத்தியவசியானது. கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு வரும் பலர் சிங்கள மொழியில் இடங்கள் குறிப்பிடப்பட்ட பஸ்களில் பயணம் செய்ய கூட அஞ்சுவதை சாதாரணமாக அவதானிக்க முடியும்.
தமிழ் மொழி உரிமை மறுப்பு மற்றும் தமிழ் மொழியின் அவசியத்தை உணர்த்த பல விடயங்களை மேற்கோள் காட்ட முடியும். இருந்தும், அது பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையே. இந்த உரிமைக்காக பா.உ மனோ கணேசனின் முயற்சி உண்மையில் மெச்சத்தக்கது.
அண்மையில் விசாரணை ஒன்றிக்காக பா.உ மனோ கணேசனை ஜனாதிபதி ஆணைக்குழு அழைத்திருந்தது. விசாரணை என்றதும் பதறிக்கொண்டு, விசாரணைக்கு அழைத்த குழுவுக்கு சாதாகமாக நடந்துகொள்ளவே பலரும் விரும்புவர். குறித்த சிங்கள அழைப்பாணையை தமிழில் அனுப்புமாறு பா.உ மனோ கணேசன் கோரியிருந்தார். அது தமிழ் மொழியில் அனுப்பப்பட்ட பிறகே விசாரணைக்கு சென்றிருந்தார். விசாரணை வாக்குமூலம் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்ததால், அதுவும் தமிழில் இருந்தாலே, தான் கையொப்பமிடுவேன் என மிக தைரியமாக கூறியுள்ளார்.
மனோ கணேசனின் குறித்த செயலானது, அவரின் மடியில் சிறிதேனும் கனமில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழ் மொழி பேசும் மக்களுக்காக, தமிழ் மொழியின் முக்கியத்துவத்திற்காக அவரின் இந்த செயற்பாட்டை நாம் பாராட்டியேயாக வேண்டும். விசாரணை வாக்கு மூலங்களை தமிழ் மொழி பேசுபவர்களுக்கு சிங்கள மொழியில் எழுதி, கையொப்பமிட கோருவது மிக ஆபத்தானது. மனோ கணேசனின் குறித்த செயலானது இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பெரும் முன்னுதாரணமானது என்பதில் ஐயமேதுமில்லை.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.