நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டிற்கான அரச பணிகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2022.01.03 ஆம் திகதி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பல்கலைக்கழக உபவேந்தரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் தேசியக் கீதமும் இசைக்கப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து தாய் நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களையும் ஏனையோரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக பதிவாளரினால் புதிய ஆண்டிற்கான அரச சேவை உறுதியுரை சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் வாசிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக ஊழியர்கள் அவ்வுறுதி உரையினைக் கூறி புதிய ஆண்டிற்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர் சிரேஸ்ட வைத்திய அதிகாரி டாக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர். ரஜப் சிறப்புரை நிகழ்த்தினார். உலகளாவிய தொற்றாக கொவிட்-19 பரவலடைந்துள்ளமை, அதனால் உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், அதிலிருந்து மீள்வதற்கான வழிவகைகள் குறித்தும் அவர் தனது உரையில் கவனம் செலுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் அவர்களின் உரை இடம்பெற்றது.
பல்கலைக்கழக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்தினைக்கூறிய உபவேந்தர், தனது உரையில் கொவிட்-19 நெருக்கடி நிலையிலும் கடந்த ஆண்டில் பல்கலைக்கழக ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கருமமாற்றியதனை நினைவு கூர்ந்தார். மேன்மைதங்கிய ஜனாதிபதியின் தொலைநோக்குக்கமைய ஒரு அறிவுக் கேந்திரமாக இந்தப் பல்கலைக்கழகத்தினை மேம்படுத்துவதற்கு சகல ஊழியர்களும் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு உபவேந்தர் நன்றிகூறினார்.
உபவேந்தர் தனது உரையில் ”மலர்ந்துள்ள புதிய ஆண்டு சுபீட்சம் நிறைந்த ஒரு ஆண்டாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் தரத்தினையும் அதன் நிலையினையும் உயர்த்துவதற்கு ஊழியர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் நிறைந்த பரஸ்பர ஒத்துழைப்பு அவசியமானது. ஒரு நிறுவனத்தில் கருமமாற்றுதல் என்று வருகின்றபோது, தனிப்பட்ட வாழ்க்கை நிலையினை கைவிட்டுவிட முடியாது. வேலைத்தளம் மற்றும் தனிபட்ட வாழ்வு ஆகிய இரண்டினையும் சமநிலையாகக் கொண்டு செல்ல வேண்டும். ஒருவர் மற்றையவர் மீது தேவையற்ற தலையீடுகளைக் கொண்டிருப்பதற்கு இடமளிக்கமுடியாது.”
”மேன்மை தங்கிய ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் கொள்கைகளுக்கமைய, பல்கலைக்கழகம் புத்தாக்க சிந்தனைகளை உள்வாங்கி தொழில்துறைக்கு ஏற்ற கற்கைநெறிகளை ஆரம்பிக்க வேண்டிய தேவையுள்ளது. தொழில்வாண்மையுள்ள, முயற்சியாளர்களாகவும் நுட்பவியலாளர்களாகவும் செயற்படக்கூடிய பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவருகின்ற ஆய்வுகளின் எண்ணிக்கையினை அதிகரித்து, அவற்றின் தரத்தினையும் மேம்படுத்த வேண்டும். நிருவாக நடவடிக்கைகளில் உள்ள தேவையற்ற காலதாமதத்தினைக் குறைப்பதற்கு இலத்திரனியல் நுட்பமுறைகளை உட்புகுத்த வேண்டும். இத்தகைய மாற்றங்களை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தக்கூடிய ஆண்டாக இவ்வாண்டினை கருதி செயற்பட வேண்டும். இதன்போது எழுகின்ற சவால்களை வெற்றிகொண்டு நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்” எனவும் உபவேந்தர் தனது உரையில் குறிப்பிட்டார்.
உபவேந்தரின் உரையுடன் இந்நிகழ்வு நிறைவுக்கு வந்தது. இந்நிகழ்வில் பீடாதிபதிகள், நிதியாளர், நூலகர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட-கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், போதனைசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் என பலரும் பங்குபற்றினர். நிகழ்வின் இறுதியில் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தமக்கிடையே புதுவருட வாழ்த்தினைப் பரிமாறிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.