டெல்லியில் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து 9 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விளையாடுவதற்காக சென்றிருந்த சிறுமி திரும்பி வந்தபோது வயிறு வலிப்பதாக கூறவே, இது தொடர்பாக அவரின் தாய் விசாரித்த போது, தனக்கு நேர்ந்த கொடுமையை அந்த சிறுமி விவரித்திருக்கிறார்.
டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த திங்களன்று (ஜனவரி 24) மதியம் 2 மணியளவில் விளையாடுவதற்காக வெளியே சென்றிருக்கிறார். விளையாடி முடித்துவிட்டு மாலை 4.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். தனது தாயாரிடம் தனக்கு வயிறு வலிப்பதாக அச்சிறுமி தெரிவித்திருக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என சிறுமியிடம் விசாரித்த போது அவர் கூறியவை அதிர்ச்சிகரமாக இருந்துள்ளது.
சாஸ்திரி பூங்கா பகுதியைச் சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவர்கள், சிறுமியை தங்கள் பகுதியில் காலியாக இருந்த வீடு ஒன்றுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி ஆபத்தான நிலையில் தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுமியின் தாயார் இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருக்கிறார். இதனடிப்படையில் சாஸ்திரி பூங்கா போலீசார் சிறுவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து, இருவர் மீதும் போக்ஸோ, கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், இச்சம்பவம் தொடர்பாக பேசுகையில், “9 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் அனுபவதித்த வலியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார். அவரின் பிறப்பு உறுப்பு கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மனிதர்களே அல்ல. அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்” என தெரிவித்தார்.