ஐக்கிய அரபு அமீரகம் திங்கள்கிழமை காலை ஹவுதி போராளிகளால் மீண்டும் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை (Ballistic missile) இடைமறித்து அழித்ததாக அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்து அழித்ததாக திங்கள்கிழமை அதிகாலை அறிவித்துள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு படையினர் ஹவுதி பயங்கரவாதிகள் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.
அதில், “பாலிஸ்டிக் ஏவுகணையின் அழிக்கப்பட்ட பாகங்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தள்ளி விழுந்ததால், தாக்குதலில் எந்த இழப்பும் ஏற்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகளும் கூட்டணிக் கட்டளையும் ஏமனில் உள்ள ராக்கெட்டுகளை ஏவ பயன்படுத்தப்பட்ட லாஞ்சர்களை தாக்கி அழித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமீரகத்தில் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிக்க முழு தயார்நிலையை உறுதிப்படுத்திய அமைச்சகம், எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ அதிகாரிகளிடமிருந்து வரும் செய்திகளைப் பின்பற்றுமாறும் அமைச்சகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் ஹவுதி போராளிகள் நாட்டின் மீது ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதலால் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் எந்த பாதிப்பும் இல்லை என்று சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
முதன் முதலாக கடந்த ஜனவரி 17 அன்று நடந்த கொடிய தாக்குதல்களில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (Adnoc) எரிபொருள் கிடங்குகளை அழித்ததுடன் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பகுதியில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம் மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு ஐநா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - https://www.khaleejtamil.com/