Ads Area

வீரமங்கை முஸ்கானுக்கு “பாத்திமா ஷேக்“ விருதை அறிவித்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.


வீரமங்கை முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

மதச்சார்பற்ற இந்திய நாட்டை இந்து ராஷ்டிராமாக மாற்ற வேண்டும் என்ற  தீய நோக்கோடு இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு தந்துள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலில் சங்பரிவார சக்திகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஒன்றியத்திலும் கர்நாடக மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவது இவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. நாட்டை கலவரக் காடாகும் நோக்கோடு, முஸ்லிம்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் தொடர்ந்து சீண்டி வந்த சங்பரிவார கும்பல் தற்போது முஸ்லிம் பெண்களின் மானத்தோடு விளையாடும் கயமைத் தனமான விளையாட்டை கையில் எடுத்துள்ளது.

அதில் ஓர் அங்கமாக கர்நாடக பள்ளி கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் தங்கள் பண்பாட்டு உடையான ஹிஜாபை அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

முஸ்லிம் பெண்களின் கல்வியையும் சுதந்திரத்தையும் பறிக்கும் அருவருப்பான செயல் திட்டத்தோடு சீரழிவு வேலைகளை செய்துவரும் கும்பலுக்கு  எதிராக, நாட்டின் மதசார்பற்ற சக்திகளும், நடுநிலையான சான்றோர் பெருமக்களும், ஓரணியில் திரண்டு இருப்பது வரவேற்புக்குரியது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நூற்றுக்கணக்கில் கூடியிருந்த சங்பரிவார காலிகள் முஸ்கான் கான் என்ற முஸ்லிம் மாணவியை  ஹிஜாபோடு கல்லூரியில் நுழையவிடாமல் தடுத்து கலாட்டா செய்ய முயன்றனர். அந்த நேரத்தில் அம்மாணவி பாதகம் செய்யும் பயங்கரவாதிகளுக்கு கிஞ்சிற்றும் அஞ்சாமல் அல்லாஹு அக்பர் ( அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓங்கி முழங்கி, மா வீரத்தோடு அவர்களை கடந்து தனது கல்வி நிறுவனத்தின் உள்ளே நுழைந்த காட்சி உலகையே நெகிழ வைத்தது.

அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை பறிக்க நினைத்த காலிகளுக்கு எதிராக, ஓர் இந்தியக்  குடிமகளின் உரிமையை, அஞ்சாமல் நிலைநாட்டிய, மாணவி முஸ்கான் அவர்களுக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கல்வி போராளி "பாத்திமா ஷேக் விருது" வழங்கப்படுமென பெருமையோடு அறிவிக்கின்றோம். ( ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்திரி பூலே ஆகியோருக்கு உறுதுணையாக இருந்து பெண் கல்விக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆசிரியர் பயிற்சி பெற்ற முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர் பாத்திமா ஷேக்)

இப்படிக்கு

எம் எச் ஜவாஹிருல்லா

தலைவர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe