Ads Area

இலங்கையின் முதலாவது அரபுத்துறை பேராசிரியராக ஜலால்தீன்.

 நூருல் ஹுதா உமர்

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை, அறபுமொழிப்பீட ஓய்வுநிலை அறபுமொழி இணைப் பேராசிரியர் (Associate Professor), எம். எஸ். எம். ஜலால்தீன் அவர்கள்,  பேராசிரியராக (Merit Professor) 2017 மார்ச் 30 திகதி முதல் பல்கலைக்கழக பேரவையினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

2017 ம் ஆண்டு தனது பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஜலால்தீன் அவர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகம் முதலில் இணைப் பேராசிரியர் பதவியை வழங்கியிருந்தது. "தனக்கு  பேராசிரியர் பதவி (Merit Professor) வழங்கப்பட வேண்டும்" என்ற அவரது மீள் பரிசீலனை விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் சிபாரிசுடன் அவரது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, அவரை மீண்டும்  பேராசிரியராக (Merit Professor) நியமிக்க கடந்த ஜனவரியில் நடந்த பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்து, 30.03.2017 முதல் இப்பதவி உயர்வை வழங்கியுள்ளது.

இப்பதவி உயர்வின் மூலம் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் முதலாவது அறபுத்துறை  பேராசிரியராக ஜலால்தீன் அவர்களே நியமனம் பெற்றுள்ளமை ஒரு வரலாற்று பதிவாகும்.

1942ம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சி காலத்தில் இலங்கை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அறபுத்துறையும் ஒரு முக்கிய துறையாக கிழக்கத்திய ஆய்வுப்பீடத்தில் (Faculty of Orientalism) இணைக்கப்பட்டிருந்தது. இத்துறையில் பேராசிரியராக பணியாற்ற இலங்கையர்கள் யாரும் அப்போது இல்லாததால், பாகிஸ்தானிலிருந்து பேராசிரியர் எஸ். ஏ. இமாம் அவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் வரவழைக்கப்பட்டு, அறபுமொழித்துறை பேராசிரியராக சுமார் 15 வருடங்கள் கடமையாற்றி, இந்நாட்டிலேயே மரணித்தார்கள். பேராசிரியர் இமாமுக்கு பிறகு இலங்கையை பூர்வமாக கொண்ட முதல்  பேராசிரியராக எம். எஸ். எம். ஜலால்தீன் நியமனம் பெற்றுள்ளமை ஒரு வரலாற்று பதிவாகும்.

பேராசிரியர் ஜலால்தீன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை அல் மனார் தேசிய பாடசாலை, கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை ஆகியவற்றில் கற்று, 1970 முதல் மஹறகம கபூரிய்யா அறபுக்கல்லூரியில் மெளலவி - ஆலிம் - கற்கை நெறியை தொடர்ந்து, 1977ம் ஆண்டு அங்கு பட்டம் பெற்று வெளியானார். கபூரிய்யா அறபுக்கல்லூரியில் இருந்து க. பொ. த. சாதாரண /உயர்தர பரீட்சைகளில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்றிய பேராசிரியர் ஜலால்தீன் அவர்கள் அக்கல்லூரியில் இருந்து, நேரடியாக (1977ம் ஆண்டு) பல்கலைக்கழக அனுமதி பெற்ற முதல் மெளலவி ஜலால்தீன் அவர்களே.

களனி பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது பட்டதாரி கற்கையை தொடர்ந்த பேராசிரியர் அவர்கள், அறபுமொழித்துறையில் தனது விஷேட கற்கையை மேற் கொண்டு விஷேட சித்தியுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து 1981ல் வெளியான போதும் அப்பல்கலைகழகத்தினால் அவ்வருடமே (அவர் மட்டுமே விஷேட சித்தி பெற்றதால்) தற்காலிக அறபுமொழித்துறை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். சில ஆண்டுகள் அங்கு கடமையாற்றியதன் பின்னர், யாழ். பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகங்களிலும் விரிவுரையாளராக கடமையாற்றி, 1989ம் ஆண்டு ஆரம்பத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்றார்.

1996ம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது, கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து இடமாற்றம் பெற்று, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்ற முதல் ஐவரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 38 வருடங்கள் உதவி விரிவுரையாளராக, சிரேஷ்ட விரிவுரையாளராக, துறைத் தலைவராக, பீடாதிபதியாக கடமையாற்றிய பேராசிரியர் அவர்கள், 2019 செப்டம்பர் 30 ந் திகதி தனது பல்கலைக்கழக பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் முதலாவது இஸ்லாமிய கற்கை, அறபுமொழிப்பீடமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக (2005 முதல் 2011வரை) ஆறு ஆண்டுகள் கடமையாற்றினார். இப்பீடத்தில் முதல் பேராசிரியரும் இவரே.ஜலால்தீன் அவர்கள் பீடாதிபதியாக கடமையாற்றிய கால கட்டம் இப் பீடத்தின் அங்குரார்ப்பண கால கட்டமாக இருந்ததால் இப் பீடத்துக்கான பாட நெறிகளை சர்வதேச தரத்தில் அமைத்து கொள்வதற்காக மலேசிய நாட்டின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இருந்து துறை சார்ந்த பேராசிரியர்களை வரவழைத்து, பாடநெறிகளை தயாரிக்க ஆவன செய்தார். குறிப்பாக, இந்திய உபகண்டத்திலேயே முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட "இஸ்லாமிய வங்கியியல்" பாடநெறியை வடிவமைப்பதில் இத்தகைய வெளி நாட்டு உதவிகளை பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழக வரலாற்றில் முதலாவது "அல் குர்ஆன், அறபுமொழி எழுத்தணி கண்காட்சியை நடாத்த அரும் பாடுபட்டார். பிரதேச உலமாக்களை ஒன்றுகூட்டி, வெளி நாட்டு பேராசிரியர்களின் வழி நடத்தலில் கருத்தரங்குகளையும், செயற்பட்டறையையும் நடாத்த ஆவன செய்தார்.

2017 ம் ஆண்டில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் மிகச் சிறந்த ஆய்வாளராக (Most Outstanding Researcher) தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டார். அறபு, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் சுமார் 15 நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் அவர்கள், முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள 10 நூல்களின் ஆசிரியர் குழுவிலும் கடமையாற்றியுள்ளார். தேசிய, சர்வதேச ஆய்வு மாநாடுகள், உலகின் பிரபல ஆய்வுச் சஞ்சிகைகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள பேராசிரியர் அவர்கள், இலங்கையின் பிரபல  பத்திரிகைகளில்  தனது சமூகம், அரசியல் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது பல்கலைக்கழக சேவைக் காலத்தில் பிரித்தானியா, ஜேர்மனி, துருக்கி, எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் இந்தோனேஷியா, பாலித்தீவு போன்ற பல நாடுகளில் நடைபெற்ற பல ஆய்வரங்குகளில் ஆய்வாளராகவும், வளவாளராகவும், பிரதம பேச்சாளராகவும் நேரடியாக கலந்து கொண்டுள்ளார். தனது பல்கலைக்கழக மாணவ காலத்தில் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலா பீடத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றியுள்ளதுடன், லண்டனில் உள்ள வெஸ்ட் லண்டன் கல்லூரி, வெஸ்ட் தேம்ஸ் கல்லூரியிலும் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் வழிகாட்டி பிரிவில் (Career Guidance Unit) சில ஆண்டுகள் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் முதலாவது தலைவரும் இவரே. தனது முதல் பட்டப் படிப்பையும், பட்டப்பின் தத்துவ முதுமானி (MPhil.) பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதி பட்டத்தை லண்டன் முஸ்லிம் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார்.

மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவராகவும், மஜ்லிஸ் ஷூறா சபையின் ஸ்தாபக தலைவராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ள பேராசிரியர், கிழக்கு முஸ்லிம் கல்வி பேரவையின் ஸ்தாபக தலைவராக தொடர்ந்து கடமையாற்றி வருகின்றார். மருதமுனையின் பிரபல வர்த்தகரும், பெரிய பள்ளிவாசல் தர்மகர்த்தாகமிருந்த மர்ஹும் சம்சுதீன் மரைக்காயர் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வருமான ஜலால்தீன் அவர்கள், சாய்ந்தமருது மர்ஹும் கனி ஹாஜியார் அவர்களின் புதல்வி நபீசா மரியம் அவர்களின் கணவருமாவார்.அவரது மூன்று புதல்விகளில் இருவர் மருத்துவர்களாகவும், ஒரு புதல்வி விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராகவும் கடமையாற்றி வருவதுடன், அவரது மூத்த மருமகன் நிந்தவூர் வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணராகவும், இரண்டாவது மருமகன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கணணித்துறை விரிவுரையாளராகவும், மூன்றாவது மருமகன் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிஸ் ஆகவும் ஒரு மருத்துவராவும் கடமையாற்றுகின்றமை விஷேட அம்சமாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe