சம்மாந்துறை அன்சார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், இந்தாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற 10 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் 65 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும். மேலும், பயணத்திற்கு வருவதற்கு 72 மணிநேரத்திற்கு முன் கோவிட்-19 பரிசோதனை செய்து, அதில் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபிய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2020ஆம் ஆண்டு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு 60,000 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.