Ads Area

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை.. ஆஸ்கர் அமைப்பு அதிரடி.

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விழாக்களிலும் அதன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதித்தது ஆஸ்கர் நிர்வாகம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த வாரம் நடைபெற்றது. கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து நகைச்சுவையாக பேசினார்.

ஜடா பிங்கெட்டிற்கு அலோபேசியா எனும் நோய் காரணமாக அவ்வப்போது முடிகள் உதிர்கிறதாம். இதனால் அவர் மொட்டை அடித்துக் கொண்டு வந்திருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னை கிண்டல் செய்கிறார்களே என ஜடா கண்ணீர் விட்டார். இதை கண்ட வில் ஸ்மித்தின் மனம் பொங்கியது.

உடனே நேராக மேடையில் ஏறினார். கிறிஸ் ராக் சிரித்துக் கொண்டே அவரை வரவேற்றார். ஆனால் ஸ்மித்தோ கிறிஸ்ஸின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வில் ஸ்மித்திற்கு குவிந்தன. உருவ கேலி என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என ஒரு சாராரும், அதற்காக மேடையில் அநாகரீகமாக தொகுப்பாளரை அடிப்பதா என மறு சாராரும் கேள்வி எழுப்பினர்.

ஸ்மித்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்கர் அகாதெமி இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து விருது நிகழ்ச்சியின் போது தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும் தனது செயலால் பெரும் சங்கடம் ஏற்பட்டதாகவும் அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை என்று கூறிய வில் ஸ்மித் தனது செயலுக்கு மன்னிப்பும் கோரினார்.

இந்த சம்பவம் குறித்து கிறிஸ் ராக் போலீஸில் புகார் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் ஆஸ்கர் அமைப்பு விசாரணை நடத்தியது. இதனால் ஸ்மித் ஆஸ்கர் அகாதெமியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாதெமி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வில் ஸ்மிததிற்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகாதெமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆஸ்கர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்தியது ஏற்று கொள்ள முடியாத நடத்தை ஆகும். இந்த எதிர்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகள் தடையை ஏற்பதாகவும் அகாதெமியின் முடிவை மதிப்பதாகவும் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe