தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் மார்ச் 22 முதல் 30 வரையிலான ஒரு வாரத்தில் சவுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 3,719 பிச்சைக்காரர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிச்சைக்காரர்கள் விசாரனை நடைபெற்று வருகின்றது.
சவுதி அரேபிய பொதுப் பாதுகாப்பு இயக்குநரகம், பிச்சை எடுப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மக்களை எச்சரித்துள்ளது, அதே நேரத்தில் பிச்சையெடுப்பது நிதி மோசடி மற்றும் முறைகேடான சம்பாதிக்கும் முறைகளில் ஒன்றாகும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது. பிச்சை எடுப்பது என்பதன் அனைத்து வடிவங்களும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய பொது பாதுகாப்பு இயக்குநரகம் மேலும் தெரிவித்துள்ளது.
மக்கா மற்றும் ரியாத் ஆகிய பிராந்தியங்களில் யாராவது பிச்சையெடுத்தால் 911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், சவுதியின் ஏனைய பகுதிகளில் யாராவது பிச்சையெடுத்தால் 999 என்ற அவசர இலக்கத்திற்கும் அறியத்தருமாறும் பொதுமக்களை கேட்டுள்ளது.
சவுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அமலுக்கு வந்த புதிய பிச்சைக்காரர் தடுப்புச் சட்டத்தின்படி, சமூக ஊடக தளங்கள் மூலம் பிச்சை எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என சவுதி அரேபிய சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சவுதியில் கைது செய்யப்பட்டுள்ள பிச்சைக்காரர்களின் சமூக, சுகாதார, உளவியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றிய ஆய்வுகளை சவுதி அரேபிய அமைச்சகம் மேற்கொள்ளும், மேலும் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக பரிசீலித்த பிறகு அவர்களுக்குத் தேவையான சமூக, சுகாதார, உளவியல் மற்றும் பொருளாதார சேவைகளை வழங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சவுதியில் பிச்சை எடுப்பது, பிச்சை எடுப்பதற்கு பிறரைத் தூண்டுவது, அவருடன் உடன்படுவது அல்லது பிச்சை எடுப்பவர்களுக்கு உதவி போன்றவற்றுக்கு 6 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு 50 ஆயிரம் ரியால் அபராதமும் விதிக்கப்படும் என பிச்சைக்காரர் தடுப்புச் சட்டத்தில் விதிகள் உள்ளன என்று வழக்கறிஞர் ரஃபல் நாசர் கூறியுள்ளார்.
அதே போல் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பிச்சையெடுப்பு மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் இரட்டிப்பாக்கப்படும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு வருட சிறைத் தண்டனை அல்லது SR100,000க்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனவும் பிச்சை எடுப்பதில் இருந்து பெறப்பட்ட பணம் மற்றும் பொருள்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.