இலங்கை பிரஜை கொல்லப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், இவ் வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல நாட்களாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் அரசுத் தரப்பும், எதிர் தரப்பும் தங்களது வாதங்களை முடித்துக் கொண்டன. விசாரணை அதிகாரிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் என சகல சாட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு, பஞ்சாபின் சியால்கோட் நகரத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்த வந்த 48 வயதான இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார என்பவரை ஒரு மிருகத்தனமான கும்பல் அடித்துக் கொன்று எரித்தது. குறித்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பிரதமர் இம்ரான் கான், வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் உறுதியளித்திருந்தார்.
நீதிபதி நடாஷா நசீம் தலைமையில் நடைபெற்ற விசாரணையின் போது, இவ் வழக்கில் அரசுத் தரப்பு 46 சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. மேலும், கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த 10 கேமராக்களின் சிசிடிவி காட்சிகளையும், குற்றம் சாட்டப்பட்ட 55 பேரின் மொபைல் போன்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களையும் ஆதாரமாக சமர்பித்தது. இந் நிலையில் அரசு வழக்கறிஞர் அப்துல் ரவூப் வத்தூ தலைமையிலான 5 பேர் கொண்ட குழு விசாரணையை நிறைவு செய்தது.
கொலை வழக்கில் மொத்தம் 89 ஆண்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், அவர்களில் 9 பேர் சிறார்களாவர். இன்று இந்த வழக்கின் கடைசி விசாரணை லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் நடத்தப்படும், அதன் பிறகு தீர்ப்பு வாசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி மூலம் -https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.