(ஏ.எல்.நிப்றாஸ்)
உலகின் பெரும்பகுதியை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாவீரன் நெப்போலியன் தனது கடைசி காலகட்டத்தில் கரப்பான்பூச்சியைக் கண்டும் அஞ்சினான் என்று ஒரு வரலாற்றாசிரியர் எழுதினார். அதுபோல, ஒரு மோசமான ஆட்சியாளராக அடையாளப்படுத்தப்படும் அடோல்ப் ஹிட்லர் ஒரு கட்டத்தில் வெளியில் எங்கும் செல்ல முடியாதபடி ஒரு கட்டிடத்திற்குள் முடங்கியதாக சரித்திரக் குறிப்புக்கள் சொல்கின்றன.
பதவியும் அரசியல் அதிகாரமும் எல்லாக் காலத்திலும் நிலைத்திருப்பதில்லை. குறிப்பாக, காலம் பிழைத்துப் போனால், சாதகமற்றதாக மாறினால் அல்லது இறைவனின் துணை இல்லாமல் போனால், எந்த முயற்சியும் பலிக்காமல் போய் விடுவதுதான் உலக நியதி;. இந்த அரசாங்கமும் கிட்டத்தட்ட இந்த நிலைக்குத்தான் வந்து கொண்டிருப்பதாக தெரிகின்றது.
மக்களை தவறான பாதையில் அழைத்துச் சென்ற அரசாங்கம் இனிமேல் முன்னோக்கிப் பயணிக்க முடியாத ஒரு முட்டுச் சந்தில் வந்து முட்டிக்கொண்டு நிற்கின்றது. நாட்டையும் மக்களையும் இப்படியொரு வழித்தடத்தில் அழைத்து வந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் ஒரு பக்கத்தில் ராஜபக்சவினரை மறித்துக் கொண்டு நிற்கின்றனர்.
கரப்பான் பூச்சியை போல மக்களை பொருட்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்ட ஆட்சியாளர்கள். இந்த மக்கள் அலையைக் கண்டு உள்ளுக்குள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
பல அரசியல்வாதிகள் ஹிட்லர் முடங்கியது போல எங்கும் ஓடவும் ஒழியவும் முடியாமல் முடங்கிக் கிடக்கின்றார்கள். இது அவர்கள் மேற்கொள்கின்ற எதிர்வினைகளில் தெரிகின்றது.
என்னதான் இதற்குப் பின்னால் அரசியல் சதி. அடிப்படைவாத குழு இருக்கின்றது என்று கூறி போராட்டங்களை மழுங்கடிக்க நினைத்தாலும் மக்கள் மிகவும் தெளிவாக இருப்பதாகவே தோன்றுகின்றது.
ஆனால், ராஜபக்சர்களுக்கும் அவர்களை சார்ந்து வாழ்கின்ற அரசியல்வாதிகளுக்கும் பதவி மீதான வேட்கை இன்னும் தீர்ந்ததாக தெரியவில்லை.
இத்தனை ஆர்;ப்பாட்டங்களும் பிரளயமும் அவமானமும் ஏற்பட்டு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாது போன பிறகும் 'ஜனாதிபதி பதவி விலகமாட்டார்' என்றும் 'பிரதமர் பதவி விலக போவதில்லை' என்றும் கூறிக் கொண்டு, நிலையான தீர்வு எதுவுமின்றி காலத்தை இழுத்தடிக்கும் பாங்கிலான போக்கானது அதிகாரத்தின் மீதான தீராவேட்கையையும், அதை விட்டுச் செல்வதில் அவர்களுக்குள்ள கௌரவப் பிரச்சினையையுமே வெளிக்காட்டுகின்றது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதியாக இருந்த காலத்தில் ஒரு சாம்ராஜியத்தைக் கட்டியெழுப்பி இருந்தார். ஏனென்றால் அவருக்கு அரசியல் தெரியும். நீண்டகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது மட்டுமன்றி. நாட்டையும் கட்டியெழுப்பினார். அப்போது அவரது குடும்ப ஆட்சி அவருக்கு துணையாக அமைந்ததாக பேசப்பட்டது.
இந்த சாமராஜியத்திலேயே கோட்டபாய ராஜபக்ச கொடியேற்றினார். மஹிந்த ராஜபக்சவின் வெற்றிகரமான அரசாட்சியும் மைத்திரி-ரணில் ஆட்சியின் தோல்வியுமே கோத்தபாயவுக்கு பெரும் பலமாக இருந்தன. இதனோடு சேர்த்து, தேசப்பற்று என்ற கோதாவில் இனவாதம் என்ற ஆயுதமும் கூர் தீட்டப்பட்டது.
இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றிருந்த, இந்த கதையின் இயக்குனர் பசில் ராஜபக்சவினால் அப்போது தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை காணப்பட்டதாகவும் இந்தப் பின்னணியிலேயே நந்தசேன கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தமது கட்சியில் எத்தனையோ மூத்த அரசியல்வாதிகள் இருக்கத்தக்கதாக தமது எதிர்ப்பையும் மீறி, குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட வேண்டும் என்ற தோரணையில் கோத்தபாயவை மஹிந்த முன்மொழிந்ததாக குமார வெல்கம பாராளுமன்றத்தில் சொன்னார்.
எவ்வாறிருப்பினும், அன்றிருந்த நிலையில் ராஜபக்ச குடும்பத்தை இருநூறு வீதம் மக்கள் நம்பினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால், அந்த நம்பிக்கையெல்லாம் வீண்போயுள்ளது. மஹிந்த கட்டியெழுப்பிருந்த சாம்ராஜ்யம் தௌ;ளத் தெளிவாக சரிந்து கொண்டிருக்கின்றது. ராஜபக்ச குடும்பத்தின் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் இன்று எதிர்;ப்பாக மாறியிருக்கின்றது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்களும் அவர்களை பிழையாக வழிநடாத்திய ஆளுந்தரப்பினரும்தான்.
மறுபுறத்தில், இந்த அரசியலை சமநிலைப்படுத்த தவறிய எதிர்க்கட்சிக்கும் மறைமுகப் பங்குண்டு.
2019 ஏப்ரல் பயங்கரவாத தாக்குதலைக் காட்டி சிங்கள மக்களை பயமுறுத்தியும், தேசப்பற்று என்ற தோரணையில் இனவாதம் பேசியும் 69 இலட்சம் வாக்குகளை மொட்டு அரசாங்கம் பெற்றுக் கொண்டது. பின்னர் 20ஆவது திருத்தத்தையும் நிறைவேற்றினர்.
இருப்பினும், முஸ்லிம்களையோ தமிழர்களையோ அரவணைத்துச் செல்வதற்கு அரசாங்கம் தவறிவிட்டது. மறுபுறத்தில் உண்மையாகவே நாட்டை நேசிக்கும் சிங்கள மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதில் வெற்றிகாணவில்லை. மாறாக, மதங்களையும் இனங்களையும் பிரித்து ஆளும் அணுகுமுறையே அவதானிக்கப்பட்டதாகச் சொல்லலாம்.
ஆனால், காலம் வேறு விதி செய்தது!
உலகில் ஏதாவது ஒரு நாட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து அரசாங்கத்திற்கு நெருக்கடி வந்ததாக நாம் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? அப்படியான நினைத்துப் பார்க்க முடியாத, முன்கூட்டியே கணிப்பிட முடியாத அபூர்வ நெருக்கடிகளை இவ்வரசாங்கத்திற்கு காலம் கொடுத்துள்ளது.
பென்னம்பெரிய கதைகளைக் கூறி வெற்றியீட்டிய இவ்வரசாங்கம், அரசியல் கோணத்தில் சிறு விடயங்களை தோன்றக்கூடிய விவகாரங்களை சரிவரக் கையாளாமல் விட்டதன் காரணமாக, இன்று பென்னம்பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு, கிட்டத்தட்ட கவிழும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
இன்றைய இலங்கை நிலைவரம் உண்மையில், மக்களது
உணர்வுகளுடன் சம்பத்தப்பட்டது. இவ்விவகாரத்தை அடிப்படைவாதத்தோடு அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் தேவையில்லை. ஆனால், அமெரிக்கா, ரஷ;யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் புவியியல் அரசியல் இதில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
எது எவ்வாறிருப்பினும், இன்று அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படுகின்ற எதிர்ப்பில் இன, மத அடையாளம் எதுவும் இல்லை. ஆட்சியாளர்களும் இனவாதிகளும் போட்ட சுவர்களை உடைத்துக் கொண்டு எல்லா மக்களும் இலங்கையர் என்ற பொதுத் தளத்திற்கு வந்துள்ளனர்.
எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி, மின்சார நெருக்கடி, அத்தியாவசிய பொருட் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றங்கள், வாழ்க்கைச் சுமை அதிகரிப்பு என்று ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற பிரச்சினைகளை அரசாங்கம் பொறுப்புடன் கையாள்வதில் தொடர்ந்தும் தவறிழைத்து வருவதால், இந்த மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அத்துடன் இதனை கட்டுப்படுத்துவதும் சிரமமான நிலைக்கு வந்துள்ளது.
நாட்டில் பொதுவிலைமட்டம் அதிகரித்தல், நியதியை மீறி பணம் அச்சிடுதல் உள்ளிட்ட பிழையான தீர்மானங்கள் ஒரு பிரதேச சபை உறுப்பினருக்கே தெரிந்த விடயம்தான். இவ்வாறான நிலைமை ஏற்படப் போகின்றது என்று ஏற்கனவே பல தரப்பினரும் எச்சரிக்கை செய்தும் இருந்தனர். ஆனால், அரச மேலிடம் குறிப்பாக ஜனாதிபதி ஏன் இது பற்றிச் சிந்திக்கவில்லை.
தரம்-10 பொருளியல் புத்தகங்களி;;ல் உள்ள விடயங்களை மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட நிதித் துறைசார் அதிகாரிகள் ஏன் தீர்மானம் எடுக்கும் அரசியல் தரப்பினருக்கு எடுத்துக் கூறவில்லை.
குறிப்பாக, இது விடயத்தில் மிகப் பெரும் அனுபவத்தை தன்னகத்தே கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்விடயத்தை தனது சகோதரர்களுக்கு அறிவுரை கூறவில்லையா? அல்லது அவர்கள் அதை செவிமடுக்கவில்லையா என்பது இன்னும் புதிராகவே உள்ளது.
இந்நிலையில், இன்றுவரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசுக்கு எதிராக பெரியதும் சிறியதுமாக 650 இற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சனிக்கிழமை முதல் கொழும்பு காலி முகத்திடலில் இரவுபகலாக மக்கள் வெள்ளம் புரண்டோடும் வகையில் இடம்பெற்று வருகின்ற எதிர்ப்பு போராட்டம் இதற்கெல்லாம் உச்சமாக அமைந்துள்ளது.
சாதாரண பொதுமக்கள், சட்டத்தணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், பெண்கள், மருத்துவ துறைசார்ந்தவர்கள் என சமூகத்தின் அனைத்து அடுக்குகளையும் சேர்ந்த மக்கள் பேதங்களை மறந்து 'இலங்கையர்' என்ற அடையாளத்துடன் வீதிக்கு வந்துள்ளனர். அல்லது அரசாங்கம் அவர்களை அப்படியான ஒரு நிலைலக்கு தள்ளியுள்ளது.
இந்த நெருக்கடி நாட்டின் ஒவ்வொரு பொதுமகனையும் பாதித்துள்ளது. அவர்களுக்கு ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற தேவையில்லை. ஆனால், ஆட்சி மாறினால்தான் நல்லது நடக்குமென்றால் அதைச் செய்யச் சொல்லிக் கேட்கின்றார்கள். இதில் அரசியல், அடிப்படைவாத கிளர்ச்சி அல்ல என்பதைக் கூட புரி;ந்து கொள்ள முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர்.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சரியாகக் கையாளதது ஒருபுறமிருக்க, மக்களது எதிர்ப்பை கையாளும் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்து தவறிழைத்து வருவதாக தெரிகின்றது.
மிரிஹானவில் ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கான மூல காரணத்தை விளங்கிக் கொள்ளாமல், பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக அவர்கள் கைது செய்யப்பட்டமை கூட பரவாயில்லை. மறுநாள், 'இது ஒரு தீவிரபோக்குடைய குழுவின் நடவடிக்கை' என்றும் 'அரபு வசந்தத்தை ஏற்படுத்தும் முயற்சி' என்றும் அரசாங்கம் அறிக்கை விட்டமை, பிழைத்துப் போனது.
இது எதிர்மறையான தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது எனலாம். தமது குரலை நசுக்க அரசு முயற்சிக்கின்றது என்று மக்கள் கருதியதால் மக்கள் எதிர்ப்பு மேலும் அதிகரிக்க காரணமாகியது.
இவ்வாறான காத்திரமற்ற கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள், 'ஆட்சியாளர்கள் மக்கள் எதிர்ப்பைக் கண்டு அச்சப்படுகின்றார்கள்' என்பதை குறிப்புணர்த்திற்று.
இவ்வாறிருக்க, ஒரு கட்டத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தமது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வருவதான ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டது. அது, அமைச்சரவை இராஜினாமாச் செய்ய வைக்கப்பட்ட போது ஆகும். ஆனால், 'புதிய கோப்பையில் பழைய மதுவை' ஊற்றிவிட்டு, மீண்டும் 'நாங்கள் விலக மாட்டோம், முடியுமென்றால் பெரும்பான்மையை நிரூபியுங்கள் 'என்று கூறி ஆடசியாளர்கள் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்காந்திருக்கின்றார்கள்.
இதுவும் ஒரு தவறான அணுகுமுறையே.
எனவே, மக்களது பிரச்சினைக்கு தீர்வு வேண்டும். அந்த தீர்வைக் காணக் கூடிய அரசாங்கம்; வேண்டும். அது பொருத்தமான எவ்வழியிலும் அமையலாம்.
ஆனால் உடனடியாக அது நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டு நிலைமைகள் எப்படி விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரியாது. இது விடயத்தில் மொட்டுக் கட்சியும் எதிர்க்கட்சிகளும் காலம்கடக்க முன்னர் ஞானம் பெற வேண்டும்.
- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசாி - 10.04.2022