உடனடிக் காரண காரியங்களுடன் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி பாராளுமன்ற ஜனநாயக அரசியல் மூலோபாயங்களூடாக எத்தகைய தரப்புக்களால் முன்கொண்டு செல்லப்படப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
என்றாலும் தற்போது தேசம் முகம் கொடுத்துள்ள நெருக்கடி நிலைமைகளை முன்கூட்டியே எதிர்வுகூறி புதிய அரசியல் கலாசாரத்திற்கான மிகத்தெளிவான வேலைத் திட்டத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே மக்கள் முன் வைத்த புத்திஜீவிகளைக் கொண்ட ஒரே அரசியல் அணியாக தேசிய மக்கள் சக்தியை காண்கிறேன்.
எதிர்காலத்தில் உள்ளூராட்சி, மாகாணசபை, பாராளுமன்றத் தேர்தல்களுக்கான மிகச் சிறந்த கட்டுக்கோப்பும், ஒழுக்க விழுமியங்களும், அரசியல் வியூகமும் கொண்ட தலைமையாக அது விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!
என்றாலும் தற்போதைய நெருக்கடி திலையிலிருந்து பாராளுமன்ற ஜனநாயக வரம்புகளிற்குள் வெளியேறுவதற்கான வேலைத் திட்டத்தில் பொது எதிரணியுடன் புரிந்துணர்வுடன் முன்செல்லத் தவறின் அவர்கள் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்து விடும் சாத்தியப்பாடுகள் இருக்கின்றன!
முதற்கட்டமாக திருத்தப்பட்ட 19A பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 20A ஒழிக்கப்படவும் நிறைவேற்று அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் இடைக்கால அமைச்சரவையிடம் வழங்கப்பட்டு பின்னர் 2023 பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்புச் செய்யப்படவும் பாராளுமன்றத்தில் உள்ள 225 பிரதிநிதிகளும் அல்லது அவர்களில் 2/3 பெரும்பான்மையினரும் உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
எதிர்கால ஜனாதிபதியை பாராளுமன்றமே தெரிவு செய்யும் முறை புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டு பொதுத் தேர்தலை ஏககாலத்தில் அதற்கான மக்களபிப்பிராய வாக்கெடுப்பாகவும் நடாத்துதல் வேண்டும்!

