ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அமைச்சரவையில் வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் குடியுரிமை விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டு இருந்த புதிய தளர்வுகளை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகி இருப்பது மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கையும் கொடுத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்புதிய நுழைவு மற்றும் குடியுரிமை திட்டத்தின் மூலம் உலக நாடுகளில் இருக்கும் திறமையான ஊழியர்களை ஈர்த்து புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வேலைவாய்ப்பு சந்தை மேம்படுவது மட்டும் அல்லாமல் பொருளாதாரம் மேம்படுத்தி அதன் மூலம் தன் நாட்டு மக்கள் மத்தியில் நிலைத்தன்மையை உருவாக்க முடியும் என நம்புவதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் சுமார் துபாய், அபுதாபி, அஜ்மான், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம் அல் குவைன் என மொத்தம் 7 நாடுகள் இணைந்துள்ளது. ஏற்கனவே UAE-யில் சுமார் 80 சதவீத மக்கள் வெளிநாட்டினராக இருக்கும் நிலையில், இப்புதிய தளர்வுகள் மூலம் அதன் புதிய அளவீடு அதிகரிக்கும். கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டு மக்கள் வாயிலாகவே தனது பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்துவருகிறது UAE.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் மிகவும் பிரபலமான கோல்டன் விசா பெறுவதற்கான கட்டுப்பாடுகள், தகுதிகள் தளர்த்தப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் பல துறைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டு உள்ளது.
முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், அதீத திறமையாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள், சிறந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள், மனிதாபிமான முன்னோடிகள் மற்றும் மக்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கு இந்தக் கோல்டன் விசா மூலம் 10 ஆண்டு குடியிருப்பு வழங்கப்படுகிறது.
இனி கோல்டன் விசா பெற்றுள்ளவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்பான்சர் செய்து விசா பெறலாம். கோல்டன் விசா பெற்றவர்கள் இனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வெளியே தங்குவதற்கான அதிகபட்ச காலம் தொடர்பான எந்தத் தடையும் இனி இருக்காது
ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் 2 மில்லியன் திர்ஹாம்களுக்கு ($544,500) மேல் ஒரு சொத்தை வாங்கும் போது கோல்டன் விசா பெறலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்திற்குப் பெயர்போன நாடாக இருந்தாலும், புதிய முதலீட்டாளர்களைக் கோல்டன் விசா மூலம் ஈர்ப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
ப்ரீலான்சர் அல்லது சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோர் இனி UAE-யில் இந்த ஸ்பான்சர் மற்றும் நிறுவனத்தின் துணையில்லாமல் 5 வருடம் தங்குவதற்குக் கிரீன் விசா பெறலாம். முதலீட்டாளர்கள் தங்களது வர்த்தகத்தைச் செய்ய 2 வருடம் அனுமதிக்கப்பட்ட கிரீன் விசா தற்போது 5 வருடமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது
திறமையாளர்கள், திறமையான வல்லுநர்கள், ஃப்ரீலான்ஸர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஈர்க்க 5 வருட குடியிருப்பு விசா (residence visa)
முதல் முறையாக UAE வருபவர்களுக்கு எவ்விதமான ஸ்பான்சர் மற்றும் நிறுவனத்தின் உதவி இல்லாமல் என்டரி விசா பெற முடியும். மேலும் இந்த என்டரி விசாவை 60 நாள் கால அவகாசம் முடிந்த பின்பு எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
ஏற்கனவே சொன்னது போல் ஸ்பான்சர் மற்றும் நிறுவனத்தின் உதவி இல்லாமல் வேலைவாய்ப்பு தேடல் விசா பெற முடியும், ஆனால் அந்நாட்டு மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் விசா விண்ணப்பதாரரின் திறன்களின் அடிப்படையில் முதல், இரண்டு, மூன்று எனப் பிரிக்கப்படுவார்கள். இந்த விசா பெறுவதற்குக் குறைந்தபட்ச கல்வி தகுதிகள் தேவை.
5 ஆண்டுக்கு பல முறை நுழைவு உரிமை கொண்ட சுற்றுலா விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் எவ்விதமான ஸ்பான்சரும் தேவையில்லை. ஆனால் $4,000 அல்லது அதற்குச் சமமான தொகை வங்கி இருப்பு இருப்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Thanks - https://tamil.goodreturns.in/