Ads Area

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு போராட்டம்.

 பாறுக் ஷிஹான்

கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஞாயிற்றுக்கிழமை(17) ஆராதனையின் பின்னர் மேற்கொண்டனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டமானது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் தலைமையில் காலை இடம்பெற்றதுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது போராட்டகாரர்கள் கர்தினாலின் குரலுக்கு செவிசாயுங்கள், இனவாதம் காட்டி உறவுகளை பிரிக்காதீர்கள், இறந்து போனவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி, இறந்து போனவர்களுக்கு நீதி வேண்டும், இனவாதம் காட்டி எங்களை பிரிக்காதீர்கள் ,பயங்கரவாதத்தினை நிறுத்துங்கள் ,அரசன் அன்று கொல்வான் இறைவன் நின்று கொல்வான், என அரசுக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருபலிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe