Ads Area

மருந்துகள் நோயாளிகளுக்கு சீராக சென்றடைய ஒரு கண்காணிப்பு முறைமை (Observation system) ஆரம்பம்.

 பாறுக் ஷிஹான்

பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு  தவிர்க்க முடியாத அளவில் ஏற்பட்டுள்ள இச்சூழலில் கல்முனை பிராந்தியத்தை பொறுத்த மட்டில் நாங்கள் மிகுந்த சிரத்தையோடு இம்மருந்து தட்டுப்பாட்டினை பொதுமக்களுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கையாண்டு கொண்டு இருக்கின்றோம்  என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை(17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு   மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்குள் இன்றைய காலகட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார துறையில் காணப்படுகின்ற மருந்து தட்டுப்பாடுகள் போன்றவற்றை முக்கியமாக இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

முதலாவதாக நமது நாட்டில ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு  தவிர்க்க முடியாத அளவில் ஏற்பட்டுள்ள இச்சூழலில் கல்முனை பிராந்தியத்தை பொறுத்த மட்டில் நாங்கள் மிகுந்த சிரத்தையோடு இம்மருந்து தட்டுப்பாட்டினை பொதுமக்களுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கையாண்டு கொண்டு இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில்  ஆரம்பத்தில் இருந்து திட்டமிடப்பட்ட வகையில் எமது பிரதேசத்திற்கான மருந்துகள் ஒழுங்குபடுத்துப்பட்டுள்ள முறையில்  வழங்கப்பட்டுள்ளதுடன் வீண்விரயங்களை தவிர்ப்பதற்காக எமது பிரதேசத்தில் RESOURCE MAPPING    என்ற செயற்பாட்டின் ஊடாக சகல வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை ஒன்றிணைத்த ஒரு கண்காணிப்பு முறைமை(Observation system)  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் எவ்விடத்தில் எல்லாம் மருந்துகள் தேவையாக இருக்கின்றதோ அதற்கேற்றவாறு உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்கின்ற ஒரு நடைமுறையினை உருவாக்கி இருப்பதன் காரணமாக தற்பொழுது மிக மோசமான மருந்து தட்டுப்பாடு அல்லது உபகரண தட்டுப்பாடுகள்  எமது கல்முனை பிராந்தியத்தில் குறைவாகவே காணப்படுகின்றது.

இருந்தாலும் காலப்போக்கில் இவை ஏற்படுவதற்கு சாத்தியகூறுகள் இருக்கின்றன.அந்த வகையில் மிகவும் சிரமத்துடன் இந்த விடயத்தினை கையாண்டு வருகின்றோம்.

குறிப்பாக மருந்து தட்டுப்பாடுகள் தனியார் மருந்தகங்கள்  வைத்தியசாலைகளில் நிலவுகின்ற சூழலில் எமது மக்களுக்கான மருந்துகள் எம்மிடத்தில் ஓரளவு கையிருப்பில் இருப்பதன் காரணமாகவும் போக்குவரத்து செலவு தனியார் வைத்தியசாலைகளின்  செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் எமது வைத்தியசாலைகளை நாட முடியும் என்ற மகிழ்ச்சியான செய்திகளை நாம் எத்தி வைக்க விரும்புகின்றோம். 

அந்த வகையில் எமக்கான வைத்தியசாலையில் நிலவுகின்ற அத்தியவசிய மருந்துகளின் தட்டுப்பாடுகள் நிலவுவதற்கு அதிகமான வாய்ப்புகள்  காணப்படுகின்றன.

முடிந்த அளவு எமது மருந்து விநியோகம் நோயாளிகளை தரப்படுத்தல் அவர்களுக்கான சிகிச்சை அளித்தல் என்பவற்றிலும் ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றி தேவைக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அத்தியவசிய நிலைமைகளை கையாளுமாறு எமது பிராந்தியத்தில் உள்ள வைத்திய நிறுவன அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயத்திற்கு  பொறுப்பான அவ்வதிகாரிகளின் காத்திரமான ஒத்துழைப்பும் கிடைத்து வருகின்றது.அந்த வகையில் பிரதேச வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் தயக்கமின்றி வைத்திய தேவைகள் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe