பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் தனத ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர், “பொதுமக்களிடமிருந்து வரும் விரக்தியையும் கோபத்தையும் நான் புரிந்து கொண்டாலும், எம்.பி.க்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவது குறித்து பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை” என்றும் எவருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை எனவும் அமைச்சர் விஜேசேகர தெளிவுபடுத்தியுள்ளார்.
மானிய விலையில் எரிபொருள் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எவருக்கும் எரிபொருள் நிலையங்களில் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார்.
பொலிஸ் கரேஜில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்திகளை அடுத்து அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள இலங்கை பொலிஸாரும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அண்மைக்காலமாக நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக பொலிஸ் கரேஜில் அவர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்காலிக நடவடிக்கையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த எரிபொருளை மானிய விலையில் வழங்காமல் உள்ளுர் சந்தையில் தற்போதைய விலைக்கே வழங்குமாறு சபாநாயகர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.