விபத்தில் மனைவி இறந்த நிலையிலும், மகள்களை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுப்பிய தந்தையின் செயல், கல் மனதையும் கரைய செய்துள்ளது. தமிழகம் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், கக்கன் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி; தனியார் 'காஸ்' ஏஜன்சியில் சிலிண்டர் வினியோகம் செய்கிறார்.
இவரது மனைவி முத்துமாரி, 38. இவர்களுக்கு வாணி ஈஸ்வரி, கலாராணி என்ற பெண் குழந்தைகள் உள்ளனர்.சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாணி ஈஸ்வரி, கலாராணி இருவரும் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம் போல, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, முத்துமாரி சங்கரன்கோவில் குப்பை கிடங்கு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது வேகமாக வந்த கார் மோதியதில், முத்துமாரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மனைவி இறந்து அவரது உ'டல் பிரேத பரிசோதனை அறையில் இருந்த நிலையிலும், மனதை கல்லாக்கிக் கொண்ட பெரியசாமி, தேர்வு எழுத சென்ற மகள்களுக்கு, தாயின் மரண செய்தியை தெரிவிக்கவில்லை.மாலை 5:00 மணிக்கு பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மகள்களிடம், 'அம்மாவிற்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது; பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். 'நீங்கள் இருவரும் நாளை கணித தேர்வை எழுதி முடித்து விட்டு வந்து, அம்மாவை பாருங்கள்' என, பெரியசாமி கூறினார்.
அதை ஏற்ற இருவரும், சித்தி வீட்டிற்கு சென்று, இரவு தங்கி படித்தனர். நேற்று காலை கணித தேர்வு எழுதினர். தேர்வு எழுதி விட்டு வந்த வாணி ஈஸ்வரி, கலாராணி இருவரையும், உறவினர்கள் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.முதலில் ஒன்றும் தெரியாமல் தவித்த சிறுமியர், பின், தங்கள் தாய் இறந்ததை அறிந்து துடித்தனர். விபத்தில் மனைவி இறந்த நிலையிலும், மகள்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்ட பெரியசாமியை பலரும் பாராட்டினர்.