Ads Area

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் காணாமல் போன 16 வயது சிறுமி வாழைச்சேனையில் மீட்பு.

 பாறுக் ஷிஹான்

காணாமற்போன சிறுமியை 24 மணித்தியாலத்திற்குள் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு கல்முனை பொலிஸார் திங்கட்கிழமை (30) இரவு  மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் காப்பகத்திலிருந்து குறித்த சிறுமி கடந்த  ஞாயிற்றுக்கிழமை (29) மதியம் 2.30 மணியிலிருந்து காணாமல் போயிருப்பதாக பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த காப்பகத்தில் ஒரு வருடமாக தங்க வைக்கப்பட்டிருந்த இச்சிறுமி  பலரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையின் பின்னர்  நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்  குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், குறித்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த காப்பத்தில் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29) பகலுணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடீரென அவர் அங்கிருந்து காணாமல் சென்று விட்டதாகவும் பாடசாலை காப்பாளர் தெரிவித்ததையடுத்து  பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இத்தேடுதலானது, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில் பல்வேறு குற்றத்தடுப்புப்பிரிவுப்  பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல்.றபீக் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எஸ.ஜனகீதன் பொலிஸ் குழுவினர்  மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பகுதியில் வைத்து  திங்கட்கிழமை (30) இரவு குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமி திங்கட்கிழமை (30) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சிறுமி தனது வாக்குமூலத்தில் தனது விருப்பத்தின் பேரில் குறித்த காப்பகத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில் பல்வேறு குற்றத்தடுப்புப்பிரிவுப்  பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல்.றபீக் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜனகீதன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe