Ads Area

அட்டாளைச்சேனையில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; கல்முனையில் சிறுமியொருவர் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை.

 பாறுக் ஷிஹான்

காணாமற்போன சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29) மதியம் 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி மாயமாகியுள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி பலரால் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு பின்னர் வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பாடசாலையில் பாதுகாப்பிற்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்  தங்க வைக்கப்பட்டிருந்தார்.

மேலும், இச்சம்பவத்தில் காணாமற்போன சிறுமி நிந்தவூரைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்கவராவார். 

குறித்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலையில் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29) பகல் உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் பின்னர் திடீரென அவர் அங்கிருந்து காணாமற்சென்று விட்டதாக பாடசாலை காப்பாளர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில் சிறுகுற்றத்தடுப்புப்பிரிவுப்  பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல்.றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர்  சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதே வேளை, கடந்த 2022.05.23ம் திகதி இரவு  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அட்டாளைச்சேனை, ரஹ்மானியாபாத் பகுதியில்  11 வயது சிறுமியொருவர் அப்பகுதியிலுள்ள கடற்கரைக்குச் சென்ற நிலையில் இரண்டு நபர்களால்  இடைமறிக்கப்பட்டு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு தூக்கிச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம்.றிபாஸ்தீன் தனது முகநூலினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.

இச்சிறுமியைச்சீரழித்த இருவரும் உறவினர்கள் என்பதுடன், உடந்தையாக உறவினர் ஒருவரின் தாயுள்ளதாக அவரது முகநூலில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில், தொடர்பு பட்ட இரு சந்தேக நபர்களையும் அக்கரைப்பற்று பொலிஸார் தேடி வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe