ஆதம்பாவா ஜலீல்
போதைப்பொருள் பழக்கம் பொதுவாக இளைஞர்கள் மத்தியிலேயே காணப்படுவதால், அவர்கள் அதிகமான நேரங்களை கழிக்கும் பாடசாலைகள், மேலதிக வகுப்புக்கள், பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களில் இப்போதைப்போருளை கட்டுப்படுத்தும், மற்றும் கண்காணிக்கும் ஓர் பொறிமுறையாக இப்பதிவு இடப்படுகிறது.
இவை, வெறும் அனுமானங்கள் அல்ல, நடந்த பல சம்பவங்களின் மூலம் தொகுக்கப்பட்டவை. எனவே தாம் சார்ந்த நிறுவனங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இவற்றை கடைப்பிடிக்க முயற்சியுங்கள். இது நமது சமூகத்தின் எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
01. மாணவர்களின் கண்கள் சிவப்பாக, அல்லது அரைவாசி மூடிய நிலையில் இருக்கின்றதா என அவதானியுங்கள்.
02. மாணவர்கள் காரணமின்றி புன்னகைத்தால், தேவையில்லாமல் பேசினால் உஷாராகுங்கள்.
03. வகுப்பறையின் குப்பைக்கூடையை எதேச்சையாக பரிசோதியுங்கள். அதனுள் பேனா குழாய், குளிசை கவர்கள், பற்ற வைத்த தாள், சுருட்டிய பேப்பர்கள், கச்சான் தகடுகள்,கண்ணாடி குழாய்கள், போன்றன காணப்பட்டால் உஷாராகுங்கள்.
04. Interval நேரம், பாடசாலையின் எல்லைகளை அவதானியுங்கள். அதனூடாக இவ்வியாபாரம் இடம்பெறுகிறது. இந்நேரம் வெளி ஆட்கள் யாரும் உள்ளே உலாவுகிறார்களா என அவதானியுங்கள்.ஏனெனில், interval நேரம் யாரும் அறியாமல் போதை பாவிப்பது, மாணவர்களுக்கும் இலகு.
05. மிக நேரத்தோடு வரும் மாணவர்களையும், மிகப்பிந்தி செல்லும் மாணவர்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் அவதானியுங்கள்.
06. அனுமதி இல்லாத, interval நேர ஐஸ்பழம், கடலை, இனிப்புப்பண்டம் போன்ற வியாபாரங்களை தடை செய்யுங்கள்.
07. டொபி, இனிப்பு வகைகள் போன்றவை, புது வகையான brand எனின், அல்லது brand பெயர்கள் இல்லை எனின், அவதானியுங்கள்.
08. மாணவர்களின் பெருவிரல், சுட்டுவிரலை அவதானியுங்கள். வித்தியாசமான மணம்,நிறம் உள்ளதா என பாருங்கள்.
09. பற்கள் ஒரு வகையான பழுப்பு நிறத்தில் உள்ளதா எனவும் உதடுகளின் உட்பகுதி சிதைவடைந்துள்ளதா, மேலும் சில வேளை வாயிலிருந்து உமிழ்நீர் வழிகின்றதா எனவும் பாருங்கள்.
10. அதிகமாக தூங்கும், மற்றும் நடுக்கம், அதிக வியர்வை ஏற்படும் மாணவர்களை அவதானியுங்கள்.
11. பாடசாலை தொடங்கும் நேரமும், விடும் நேரமும் வெளியில் வித்தியாசமானவர்கள் யாரும் நடமாடுகின்றனரா என அவர்தானியுங்கள்.
12. மாணவர்களின் புத்தகம், கொப்பி, கொம்பாஸ், பேர்ஸ் ஆகியவற்றை random ஆக திறந்து பாருங்கள், ஏதும் வெள்ளை நிற பவுடர்கள் பக்கங்களுக்கிடையில் உள்ளனவா என்று. இவ்வாறான போதைப்பொருளே இப்போது அதிகமும், பாவிக்க இலகுவும் ஆகும்.
13. மன்னிக்கவும், சில staff, மற்றும் சிற்றூழியர்கள் மீதும் அவதானமாக இருங்கள்.
14. "இவர் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர், செய்ய மாட்டார்", "இது பெண் பிள்ளை, செய்யாது" என அலட்சியமாயிராதீர்கள்.
15. தேவைக்கு மேலதிகமாக பணம் வைத்திருக்கும் மாணவர்கள் மீது பார்வையை செலுத்துங்கள். அவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளுங்கள்.
16. அடிக்கடி நீர் அருந்தும், தாகம் ஏற்படும் மாணவர்களை அவதானியுங்கள்.
17. கல்வியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்ட மாணவர்களை சந்தேகியுங்கள்.
18. சொல்லாமல் இருக்க முடியாது, பாடசாலைக்கு அடிக்கடி வந்து போகும் சில பெற்றோர்களின் மீதும் விழிப்பாயிருங்கள்.
19. Free time எல்லாம் canteen இல் தனியாக இருக்கும் மாணவர்களை உற்று நோக்குங்கள்.
20. போதைப்பொருளின் தீங்குகளை மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள், பிடிபட்டால் தமது வாழ்க்கைக்கு ஏற்படும் நிரந்தர பாதிப்புகளை பற்றியும் எடுத்துரையுங்கள், மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டல்களை ஊக்குவியுங்கள்
21. தனிமையிலேயே திரியும் மாணவர்களையும், அடிக்கடி மலசல கூடம் செல்லும் மாணவர்களையும் அவதானியுங்கள்.
22. சந்தேகத்துக்கிடமான போதை பொருட்கள் ஏதும் கண்டெடுக்கப்பட்டால், இது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நாடி, அது போதைவஸ்து என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்பே தகவலை வெளியிடுங்கள்.
இவ்வளவு காலமாக மாணவர்கள் சப்பாத்து அணிந்தார்களா, முடி வெட்டினார்களா, நகம் வெட்டினார்களா என பார்த்ததெல்லாம் சற்று ஒதுக்கிவிட்டு, இந்த பயங்கர சீரழிவை இல்லாதொழிக்க மேற்கூறியவற்றின் மீது அவதானம் செலுத்துங்கள்.
இதன் அர்த்தம் சகலரின் மீதும் சந்தேகியுங்கள் என்பதல்ல. நியாயமான சந்தேகம் தவறல்ல.
இக்கொடிய தீங்கிலிருந்து சமூகத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வாருங்கள். எதிர்காலம் ஆபத்தானது. மேலதிக உதவிக்கு நாமும் தயார், அழையுங்கள்.