முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளார்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து மஹிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படை முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் ஆதரவாளர்கள், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்ததைத் தொடர்ந்து, கொழும்பில் காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியது, பொதுமக்கள் பல SLPP அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் வாகனங்களை எரித்தனர்.
அமைதியின்மையைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார், அந்த இடத்திற்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மறுநாள் மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் திருகோணமலைக்கு மாற்றுவதற்கான விசேட இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு வெளியே மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கடற்படைக்கு எதிராக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாகக் கூறப்படும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
அமைதியின்மை காரணமாக கடற்படை முகாமில் பல நாட்கள் தங்கியிருந்த போதிலும், நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் முன்னாள் பிரதமர் கலந்துகொண்டுள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.