ஹிஜ்றா மீன் சந்தையில் இயங்கி வந்த மீன் வியாபாரம் கொவிட் தொற்று காரணமாக சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைவாக நிறுத்தப்பட்டு மக்களின் நலன் கருதி நடமாடும் வியாபாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வீதியோரம் மீன் வியாபாரம் செய்து வருபவர்கள் மீண்டும் ஹிஜ்றா சந்தைக்குள் மீன் வியாபாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு விரும்பாத நிலையில் காணப்படுகின்றனர். இதற்கு காரணம் மீன் வியாபாரிகள் வீதியோரங்களில் தனது வியாபாரத்தினை ஏலவே இலாபத்துடனும், போக்குவரத்து செலவின்றியும் மேற்கொள்வதாகும்.
வீதியோர வியாபாரத்துக்கு பிரதேச சபை ஒருபோதும் அனுமதி வழங்குவதுமில்லை வழங்கவும் முடியாது. இதை கட்டுப்படுத்தும் பொறுப்பு பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவிற்கும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் உடையதாகும்.
வீதியோர மீன் வியாபாரத்தினை அகற்றுவதற்கு பல தடவைகள் முயற்சித்தும் வெற்றியளிக்கவில்லை. இதற்கான முக்கிய காரணம் பொதுமக்கள் அவர்களின் சௌகரியம் கருதி வீதியோரங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு துணை ஆதரவு செய்வதினாலயே. இதனால் ஏற்படும் வீதி நெரிசலை மட்டும் சமூக ஊடகங்களின் மூலம் முறைப்பாட்டை பதிவு செய்கின்றனர்.
சம்மாந்துறை பிரதேச சபை வீதியோரங்களில் நிலையான மீன் வியாபாரம் செய்வதை தடை செய்யுமாறு சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும், சுகாதார வைத்திய அதிகாரிக்கும், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இதை உரிய இடத்தில் செயற்படுத்துவதற்கும், வீதியோரங்களில் நிலையான மீன் வியாபாரம் செய்பவர்களை ஊக்குவிக்காமல் அவர்களை புறக்கணிப்பதன் மூலம் மீன் வியாபாரத்தை சந்தைகளுக்குள் விற்பனை செய்ய ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
ஊடகப் பிரிவு
சம்மாந்துறை பிரதேச சபை
2022.05.17