இலங்கையில் பெற்றோல் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் அவர் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்,
தேவையான பெற்றோல் இருப்புக்கள் அடங்கிய கப்பலை விடுவிப்பதற்காக நேற்று பணம் செலுத்தப்பட்டுள்ளது அதனால் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி முதல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொண்ட கப்பலொன்றுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய டொலர் தொகையை செலுத்துவதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அந்தக் கப்பல் விடுவிக்கப்படவில்லை என அமைச்சர் சற்று முன்னர் தெரிவித்திருந்தார்.
இதையொட்டி நாட்டில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பல நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் கேஸ் (LPG) நிலைமை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல் வழங்கியுள்ளார். ட்விட்டர் செய்தியில், பிரதமர் நேற்று உறுதியளித்தபடி எல்பிஜி கொண்ட கப்பலில் இருந்து எரிவாயு இறக்கப்படவில்லை என்றும் நேற்றைய தினம் கப்பலில் இருந்து லொறிகள் மூலம் எரிவாயு இறக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உறுதியளித்த போதிலும் அது நடக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விளக்கமளிக்குமாறு லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
லிட்ரோ கேஸ் லங்கா அதிகாரிகளையும் அழைக்குமாறு பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) கோரப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.