காலம் தாழ்த்தி கட்டணம் செலுத்தும் அரச நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் அறவிடப்படும் என்று நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தாமத கொடுப்பனவுகளுக்காக 2.5 சதவீதம் மேலதிகக் கட்டணம் அறவிடப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய சுமார் 6.5 பில்லியன் ரூபா கட்டணம் நிலுவையில் உள்ளது. அத்துடன், அரசாங்க நிறுவனங்களால் 800 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலுலைக் கட்டணத்தை வசூலிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, நுகர்வோர் வலயங்களின் அடிப்படையில் இந்த கட்டண வசூலிப்பு செயன்முறை முன்னெடுக்கப்படும்.
இதேவேளை, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்கு அமுலுக்கு வரும் வகையில், சாதாரண நுகர்வோரின் தாமத கொடுப்பனவுகளுக்காக 2.5% மேலதிகக் கட்டணமாக அறவிடப்படும். இந்த நிபந்தனை அரச நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.