அமீரகத்தில் இதுவரையிலும் வாட்டர் டாக்ஸி சேவையானது துபாயில் மட்டுமே இருந்து வந்த நிலையில் அபுதாபியில் முதன் முறையாக வாட்டர் டாக்ஸி சேவையானது தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருக்கும் யாஸ் பே (Yas Bay) மற்றும் ரஹா பீச் (Raha Beach) ஆகிய இடங்களுக்கு இடையே இந்த புதிய பொது வாட்டர் டாக்ஸி சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சேவையானது பொதுமக்களுக்கு மாற்றுப் போக்குவரத்து வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதோடு வாரத்தில் ஏழு நாட்களும் இந்த சேவை இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவையானது ஆரம்பத்தில் அதிக தேவை உள்ள இடங்களான யாஸ் பே, யாஸ் மெரினா மற்றும் அல் பந்தர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
அபுதாபியின் முனிசிபாலிட்டிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் (DMT) செயல்பாட்டு விவகாரங்களின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சலீம் கல்பான் அல் காபி இது பற்றி கூறுகையில்: “அபுதாபி மரைடைம் உடனான எங்கள் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, அபுதாபி எமிரேட்டை மேம்படுத்தும் வகையில் மேம்பட்ட சேவைகளை வழங்க நாங்கள் அபுதாபி போர்ட்ஸ் (Abudhabi Ports) குழுமத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். அபுதாபியில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக தேவை உள்ள இடங்களுக்கான அணுகலை இன்னும் எளிதாக்கும் பொருட்டு இந்த சேவை இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
அபுதாபி மரிடைம் (abudhabi maritime) நிர்வாக இயக்குநர் கேப்டன் சைஃப் அல் மஹெய்ரி கூறுகையில், “யாஸ் பே மற்றும் ரஹா பீச் பகுதிகளில் பொது வாட்டர் டாக்ஸி சேவைகள் தொடங்கப்பட்டிருப்பது, உலகத் தரம் வாய்ந்த பொது நீர் போக்குவரத்தை அபுதாபியில் மேம்படுத்துவதற்கான எங்களின் நீண்டகால உத்தியின் முக்கிய தருணத்தை பிரதிபலிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
thanks-khaleejtamil