Ads Area

அபுதாபி குழந்தை தந்தையிடம் ஒப்படைப்பு..உயர் நீதிமன்ற.

 மதுரை : ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் இருந்து திருச்சி வந்தபோது, மாமனாரால் பறித்துச் செல்லப்பட்ட குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: கடந்த, 2016ல் திருமணமாகி, மனைவியுடன் அபுதாபி சென்றேன். அங்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஆண் குழந்தை பிறந்தது. 


மனைவிக்கு மன ரீதியான பிரச்னை இருந்தது. இது அவரது பெற்றோருக்கு தெரியும். அபுதாபியில் ஜூன், 7ல் நான் வேலைக்குச் சென்றேன்; மகன் பள்ளி சென்றார். மனைவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இறுதிச் சடங்கு செய்ய மனைவி உடலுடன் நானும், மகனும் இந்தியா வந்தோம். திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, மாமனார், அவரது உறவினர்கள் என்னை தாக்கினர்.


மேலும், எனது மற்றும் மகனின் பாஸ்போர்ட்டை பறித்துச் சென்றனர். சட்ட விரோதமாக மாமனாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள என், 5 வயது மகனை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட குழந்தை, தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவித்தது.


நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குழந்தை தந்தையுடன் செல்லலாம். குழந்தையை சந்திக்க மாமனார் குடும்பத்தினர் செல்லும் போது மனுதாரர் தரப்பில் தடுக்கக்கூடாது. இதில் ஏதேனும் நிவாரணம் தேடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.

thanks-dinamalar



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe