Ads Area

முஸ்லிம் கட்சிகள் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டும் : மக்கள் காங்கிரஸ் பிரமுகர் ஏ.எல். கால்தீன்

 நூருல் ஹுதா உமர்


ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் காதல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கமால் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்தித்து முஸ்லிங்களுக்கு உள்ள காணிப்பிரச்சினைகள், முஸ்லிங்களின் இருப்புக்கான பிரச்சினைகள், உரிமைகள், உடமைகளுக்கான பிரச்சினைகள், விவசாயிகள் உட்பட தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பேச முன்வரவேண்டும். முஸ்லிங்களுக்கு இலங்கையில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் ஏ.எல். கால்தீன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு தெளிவை உண்டாகும் பொறுப்பை ஊடகங்கள் பொறுப்பேற்க வேண்டும். வடக்கு கிழக்கில் ஜனாதிபதி வழங்க இருக்கும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிங்களின் நிலைப்பாடு என்ன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வு திட்டத்தை ஒற்றுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றேன். மறைந்த அஸ்ரப் மு.காவை உருவாக்கி முஸ்லிங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற போராடினார். ஆனால் இப்போது முஸ்லிங்கள் மத்தியில் அந்த நிலை மங்கிவிட்டது.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து முஸ்லிங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டத்தை முன்மொழிய வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் குரலாக இயங்குகிறது. அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். முஸ்லிங்களின் ஒற்றுமை சிதைவினால் முஸ்லிங்களின் காணி மீது அரச பயங்கரவாதம் தலையிட ஆரம்பித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி தீர்வு திட்ட வரைவை தயாரிக்க சகல அரசியல் இயக்கங்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு உடனடியாக இவ்விடயம் ஆராயப்பட வேண்டும். காலம் கடந்தால் நாம் பலத்த பாதிப்பை சந்திக்க நேரிடும்

தேர்தல் கால அன்பளிப்புக்களுக்கு வாக்களித்து பழகிய முஸ்லிம் சமூகம் சமூக சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளை அதிகாரத்தில் அமர்த்த தவறிவிட்டது. தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் அம்பாறையில் தமிழ் மொழிபேசும் அரசாங்க அதிபரை கூட நியமிக்கமுடியாதளவுக்கு வங்கரோத்து நிலையில் வாழ்கிறோம் என்பதே அரசியல் பிற்போக்கு நிலைக்கு நல்ல எடுத்துக்காட்டு என்றார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe