Ads Area

மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கும் அம்பாறை மாவட்ட மக்கள்.

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேச   பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


இம்மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பகுதிகளில் இப்பிரதேசத்தில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன், தற்போது அங்குள்ள மக்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதற்கு மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகாலின்மையே முக்கிய காரணமென்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.


மேற்படி பிரதேசங்கள் ஒவ்வொரு வருடமும் மழையினாலும் அதனால் ஏற்படும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சில வேளை இம்மக்கள் இடம்பெயரும் நிலைமையும் ஏற்படுகிறது.


இப்பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு ஒழுங்கான வீடமைப்பு வசதியில்லை. ஒழுங்கான வீதி கிடையாது, மின்சார வசதியில்லை, நீர் வடிந்தோட ஒழுங்கான வடிகால்கள் இல்லை. சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல கஸ்டப்படுகின்றனர். தொழில் செய்வது சிரமமாகவுள்ளது இது தான் அம்மக்களின் நிலையாகவுள்ளது.


கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்றாட உணவுகளைச் சமைத்துண்ண முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர்.


தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், வெள்ளநீர் தேங்கிக் காணப்படுகின்ற நிலைமையே தொடர்கதையாகவுள்ளது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe