Ads Area

மாணவி ஜினோதிகாவினால் சம்மாந்துறை மட்டுமல்ல முழு கிழக்கு மாகாணமே பெருமை கொள்கிறது.

காரைதீவு - சகா.


தனது கணித ஒலிம்பியாட் சாதனை மூலம் அகில உலகத்தையே மல்  வத்தையின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜினோதிகா. அவரால் எமது வலயம் மட்டுமல்ல முழு கிழக்கு மாகாணமே பெருமையடைகிறது என சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தெரிவித்துள்ளார்.


மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய மாணவி சிவரூபன் ஜினோதிகா தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்திருந்தமையை பாராட்டுமுகமாக பாடசாலையின் அதிபர் திருமதி கௌசல்யா கணேஸ்வரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது.


அங்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா, சிறப்பதிதிகளாக பிரதி கல்விப் பணிப்பாளர்களான திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார், ஏ. எல் அப்துல் மஜீத், உதவி கல்விப் பணிப்பாளர்களான வி.ரி.சகாதேவராஜா, எம் எம் எம்.ஜௌபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.


அங்கு பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா மேலும் தெரிவிக்கையில்..


நாலடியாரில் “களர்நிலத்து பிறந்த உப்பினை என தொடங்கும் பாடலில் கடை நிலத்தோர் ஆயினும் கற்றறிந்தோர் கலை நிலத்தில் வைக்கப்படுவர் “என்று முடிகின்றது .


உப்பு களர் நிலத்தில் பிறந்தாலும் சாப்பாட்டு மேசைகளிலே மிகவும் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதுபோல எந்த பின்தங்கிய பிரதேசத்தில் ஒருவர் பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குகின்ற பொழுது அவர் அவையின் முன்னே வைக்கப்படுவார்கள்.


அங்கு சாதியின மத பேதம் பார்ப்பதில்லை. அந்த அளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் இருக்கின்றது. எனவே மாணவர்களே உங்களுக்குள்ள ஒரே ஆயுதம் கல்விதான்.கல்வியை அனைத்து மாணவர்களும் இறுக பற்றி கொள்ளுங்கள். சாதனைகள் படைக்கலாம். பாராட்டுக்கள் கிடைக்கும். இங்கு பல ஜினோதிகாக்கள் உருவாக வேண்டும். என்றார்.


விழாவில் ஜினோதிகாவின் பெற்றோர் திருதிருமதி சிவருபன் கலந்து கொண்டார்கள்.


அங்கு பாடசாலை சமூகத்தால் ஜினோதிகாவுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கப்பட்டது .மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் வாழும் மல்வத்தையைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை ரவிச்சந்திரன் வழங்கிய ஒரு தொகை நிதியினை அவரது சகோதரி திருமதி சுமதி ஆசிரியை வழங்கி வைத்தார்.


வரவேற்புரையை தமிழ் ஆசிரியர் எஸ்.திவாகரன் வழங்க நன்றியுரையை கணித ஆசிரியர் உதவி அதிபர் ஆர். ரத்னகுமார் வழங்கினார் .


அங்கு கணித ஆசிரியர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe