Ads Area

உலகில் உள்ள ஏனைய போராட்டங்களைவிட பாலஸ்தீன போராட்டம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது ?

ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் உரிமை இழந்த சமூகம் அதற்கு எதிராக போர் புரிவது அந்த பிரதேச சமூகத்தின்மீது கடமையாகும். ஆக்கிரமிப்புக்குள்ளான பாலஸ்தீனை மீட்பது உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்கள்மீதும் கடமையாகும். 


ஜெரூசலத்தை உள்ளடக்கிய பாலஸ்தீனம் நீண்ட வரலாறுகளைக்கொண்ட ஓர் மிகப் பழமை வாய்ந்த பூமி. அங்கு பல நபிமார்கள் வாழ்ந்தார்கள். இப்ராஹீம் நபி, லூத் நபி போன்றவர்கள் பாலஸ்தீனை நோக்கி ஹிஜ்ரத் சென்றிருந்தார்கள். அத்துடன் நபிமார்கள் பலரது அடக்கஸ்தளமும் அங்கே உள்ளது. 


கிறிஸ்தவர்களினால் இயேசு என்று அழைக்கப்படுகின்ற ஈசா நபி அவர்கள் பிறந்த “பெத்லகேம்” என்னும் இடமும், அவர்கள் உயர்த்தப்பட்ட ஜெரூசலமும் பாலஸ்தீனிலேயே உள்ளது.   


"மஸ்ஜிதுல் அக்சாவையும், அதனை சூழவுள்ள பகுதிகளையும் அருள்பாலிக்கப்பட்ட பூமியாக ஆக்கினோம்" என்று அல்-குர்ஆனில் கூறப்படுகின்றது.


சுலைமான் நபி (சாலமன்) அவர்களினால் கட்டப்பட்ட பைத்துல் முகத்தசை நோக்கி முகம்மது நபி அவர்களும், தோழர்களும் சுமார் பதினேழு மாதங்கள் தொழுதார்கள். முகம்மத் நபி அவர்கள் விண்ணுலக பயணமான “மிஹ்ராஜ்” சென்றபோது மக்காவில் இருந்து பைத்துல் முகத்தசுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விண்ணுலகம் பயணமானார்கள். 


அல்-குர்ஆன் இறக்கப்பட்ட காலங்களில் இந்த நகரத்திற்கு வேறு பெயர் இருந்ததன் காரணமாக அல்-குர்ஆனில் இந்த நகரத்தின் பெயரை “பாலஸ்தீன்” என்று நேரடியாக கூறாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இரண்டாவது ஹலீபா உமர் அவர்களின் ஆட்சியில் பாலஸ்தீனம் கைப்பேற்றப்பட்டதுடன், ஹலீபா உமர் அவர்கள் அங்கு நேரடியாக சென்று தொழுதார்கள்.


உலகில் உள்ள இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செய்யக்கூடிய மூன்று இடங்களில் மக்காவுக்கும், மதீனாவுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றதோ அதே முக்கியத்துவம் மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல் முகத்தஸ்) அமைந்துள்ள பாலஸ்தீன மண்ணுக்கும் உள்ளது.     


முஸ்லீம்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த புனித பிரதேசத்தை யூதர்கள் உரிமை கோருகின்றனர். அதில் கி.மு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலிய மன்னர் தாவீது (தாவூத் நபி) ஜெரூசலம் நகரை நிறுவியதாகவும் அவரது மகன் சாலமனால் (சுலைமான் நபி) புகழ்வாய்ந்த “சாலமன் தேவாலயம்” அங்கு கட்டப்பட்டதாகவும் யூதர்கள் கூறுகின்றனர்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற சாலமன் தேவாலயத்தை ஜெரூசலத்தில் மீண்டும் கட்டுவதுதான் யூதர்களின் இறுதி இலட்சியமாகும். 


அதற்காக இஸ்ரேலின் தலைநகரை ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது ரொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்தார்.  

 

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள வரலாறுகளை மையமாகக்கொண்டு அல்-குர்ஆனில் கூறப்படுகின்ற முஸ்லிம்களின் புனித பிரதேசத்தை யூதர்கள் அபகரித்து ஆட்சி செய்கின்றார்கள்.


அதாவது உலகில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் ஆட்சி அதிகாரத்துடன் வாழ்கின்ற முஸ்லிம்களின் புனித பிரதேசத்தை ஒரு சிறுபான்மை யூதச் சமூகம் பலாத்காரமாக அபகரித்து அங்கு பூர்வீகமாக வாழ்ந்துவந்த இஸ்லாமியர்களை விரட்டிவிட்டு ஆட்சி செய்து வருகின்றது. 


எனவே ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் புனித தளத்தினை பீட்பது அந்த பிரதேசத்தில் வாழ்கின்ற ஹமாஸ் இயக்கத்திற்கு மாத்திரம் கடமையானதல்ல. உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அது கடமையாகும். அதனாலேயே உலகில் உள்ள போராட்ட இயக்கங்கள் இஸ்ரேலுக்கு எதிரான போர்க்களத்தில் குதிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe