Ads Area

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் : இடைக்காலத்தீர்வு நீதிமன்றத்தால் நிராகரிப்பு.

 


மாளிகைக்காடு நிருபர்

 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமான வழக்கொன்று பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக இடம்பெற்று வரும் நிலையில், இவ்வழக்கில் மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் அவரது சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகி வாதாடி வருகின்றனர். 


இவர்கள் இடைக்காலத்தீர்வாக கல்முனை உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இயங்க செய்ய வேண்டுமென்பது உட்பட இன்னும் மூன்று நிவாரணங்களைக் கோரியுள்ளனர்.


இது தொடர்பிலான இடையீட்டுத் தீர்வொன்று கடந்த மே மாதம் 23ம் திகதி கட்டளையாகப் பிறப்பிக்கப்படவிருந்த நிலையில், மே முதலாம் வாரமளவில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர்ரஹ்மான் ஆகியோர் இணைந்து தங்களை இடையீட்டு மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளுமாறு நீதிமன்றத்தைக்கோரி இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். 


அவர்களின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனடிப்படையில், இடையீட்டுத் தீர்வொன்றை வழங்கக்கூடாதென்று இடையீட்டு மனுதாரர்களும், இடையீட்டுத்தீர்வை வழங்கக்கோரி சுமந்திரன் தரப்பினரும் வாதிட்டு பின்னர் தமது பக்க நியாயங்களை எழுத்து மூல சமர்ப்பிப்புக்களாகவும் செய்திருந்தனர்.


இருதரப்பு சமர்ப்பணங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் இம்மாதம் 15ம் திகதி இடைக்கால கட்டளையைப் பிறப்பிக்கவிருந்த நிலையில், இன்று (24) வரை ஒத்தி வைத்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தலைவர் கௌரவ பந்துல கருணாரத்ன அவர்கள் தனது தீர்மானத்தை மன்றுக்கு அறிவித்தார். 


அவரது அறிவிப்பில் கல்முனை உப பிரதேச செயலக வழக்கில் இடையீட்டுத்தீர்வைக் கோரிய மனுவையும் அதற்கெதிரான மனு, வாதங்களைப்பரிசீலித்து ஆராய்ந்த பின்னர் இவ்விடையீட்டு நிவாரணத்தை நிராகரிப்பதாகவும் அத்தீர்வை வழங்க முடியாதென்றும் மன்றுக்கு அறிவித்திருந்தார். 


இதனடிப்படையில், சுமந்திரன், கலையரசன் தரப்பினர் நீதிமன்றத்தைக்கேட்டிருந்த இடைக்காலத்தீர்வை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


அதே நேரம், வழக்கைத்தொடர்ந்தும் விசாரிக்க எதிர்வரும் 2024.01.17ம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர்ரஹ்மான் ஆகியோர் இணைந்து கடைசி நேரத்தில் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக கல்முனை மாநகர முஸ்லிம்களுக்கு ஏற்படவிருந்த இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் பொது அமைப்புக்களின் பிரதானிகளும் கருத்து வெளியிட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe