மாவீரர் நாள் உரையினை பிரபாகரன் துவாரகா நிகழ்த்த உள்ளார்: புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் இன்பராசா தெரிவிப்பு
துவாரகா பிரபாகரனின் மாவீரர் நாள் உரை நாளை இடம்பெறும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
இன்று (26.11) வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2008 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின் பின்னர் தற்போது தேசிய தலைவரான பிரபாகரனின் மகளும் தமிழர்களின் அரசியலை கொண்டு செல்ல உள்ள துவாரகா பிரபாகரனின் மாவீரர் நாள் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
குறித்த செய்தியினை உலகத் தமிழ் மக்களுக்கு தெரிவிக்குமாறு நேற்றைய தினம் எனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதன்பிரகாரமே குறித்த செய்தியினை நான் பகிரங்கமாக வெளியிடுகின்றேன்.
2009 ஆம் ஆண்டு போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாமல் இருந்தது. நாம் சிதறுண்டு காணப்பட்டோம். போராளிகளுக்கும் மக்களுக்குமான தலைமை இல்லாமல் இருந்து. இந்த தருணத்திலேயே தற்போது மாவீரர்களது தியாகங்கள் வீண் போகாத வகையில் துவாரகா பிரபாகரனின் உரை இடம்பெற இருக்கின்றது.
குறித்த செய்தி அடுத்த கட்ட செயற்பாடு என்ன என்பதை எடுத்துக் கூறுவதாக இருக்கும். அவரது வருகையின் பின்னர் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் நிலை உருவாகும். இதன் ஊடாக எமது அரசியல் ஜனநாயக ரீதியான போராட்டமும் முன்னெடுக்கப்படும். நாளைய தினத்தின் பின்னர் துவாரகா பிரபாகரன் மக்களுடனேயே இருப்பார். சிலர் கூறுவது போல தொழில்நுட்ப ரீதியிலாக இது உருவாக்கப்படவில்லை. அவருடன் கல்வி கற்ற பலர் அவரது குரலை கேட்டு துவாரகா தான் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆகவே அவர் நாளை வந்து மறைந்து போவாராக இருந்தால் இதனை தொழில்நுட்பத்தில் உருவாக்கியதாக தெரிவிக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்தும் மக்களுடன் பயணிப்பார். மக்களுக்காகவே செயல்படுவார். எனவே சிலர் கூறுவது போல் இது தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்படுமொன்றல்ல. உண்மையில் அவர் உள்ளார். அவருடைய ஒரு உரை நாளை இடப்படும் என தெரிவித்தார்.
நன்றி - தமிழ் தேசிய செய்திகள்.