Ads Area

மீண்டும் காற்றுடன் கூடிய மழை - பொதுமக்கள் சிரமம் - வெள்ளம் தேங்கி காணப்படும் வீதிகள்.



பாறுக் ஷிஹான்


அம்பாறையில் காற்றுடன் கூடிய மழை என காலநிலை  மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.


சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாகப்பாதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்குட்பட்ட  பிரதான போக்குவரத்துபாதைகள் சில வெள்ளக்காடாகக்காட்சி தருவதனால் தூர இடங்களுக்குச்செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு, உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது.


இன்று ஆரம்பித்த மழை வீழ்ச்சி அதிகாலை முதல் பலத்த மழையாக மாறி வருவதுடன், வானம் இருள் சூழந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படுகின்றது.


திடீரென அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதிகளில் கடும் மழையுடன் காற்று  வீசியது.


இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள், வாகனச்சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு வரை காலை வேளையில் பனி மூட்டம் காணப்பட்ட போதிலும், தற்போது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் பலத்த காற்று வீசி வருகின்றது.


இது தவிர, கடற்பிராந்தியங்களில் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதனால், மீனவர்கள் மீன் பிடிப்பதிலிருந்து தவிர்ந்து வருகின்றனர். இதேநேரம் மழை வீழ்ச்சி இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில், நீர்நிலைகள் யாவும் நிரம்பியுள்ளதுடன், சில தாழ்நில நெற்செய்கை வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது


பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச்செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தில்  திடீரென மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் எனப்பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.


அண்மையில் பெய்த அடை மழை காரணமாக வெள்ள நிலை ஏற்பட்டு மக்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இதன்  காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதுடன், சில குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி  பாடசாலைகளில் தங்கியிருந்த நிலையில் மீண்டும் வெள்ளம் வடியத்தொடங்கியுள்ள நிலையில் தத்தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில், மீண்டும் மழை வீழ்ச்சி ஆரம்பித்துள்ளதனால் பொதுமக்கள் தற்போது சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


அத்துடன், கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாகவுள்ளது.


ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் பெரும்கவலையினைத் தெரிவித்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe