(சர்ஜுன் லாபீர்)
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணத்தில் உருவான உரித்து (උරුමය) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச காணிகளை நிபந்தனையற்ற ரீதியில் சுதந்திரமான முறையில் பூரண உரிமையாக அளிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் தம்புள்ளையில் இடம்பெற்றது. இதில் அகில இலங்கை ரீதியாக சம்மாந்துறை பிரதேசம் முதலிடம் பெற்றது.
உருமய பூரண உறுதி அளிப்புத்திட்டத்தில் சம்மாந்துறையிலிருந்து இலங்கையிலே ஆகக்கூடுதலாக (711) பொதுமக்களுக்கு முதல் முறையாக பூரண உறுதி அளிப்புகள் வழங்கப்பட்டது.
இது பிரதேச ரீதியாக அகில இலங்கை ரீதியில் ஆகக் கூடுதலான பூரண உறுதி அளிப்பாகக் காணப்படுகின்றது. இத்திட்டத்தில் நாடு ரீதியாக முதல் உறுதி அளிப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் உடங்கா-01 கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த எம்.டி.குழந்தை உம்மா என்பவருக்கு ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக, முதன்முதலாக சம்மாந்துறை பிரதேச செயலகத்திலிருந்து நில அளவைத் திணைக்களத்தின் ஊடாக "O" வரைபடம் அனுப்பி வைக்கப்பட்டதனால் குறித்த பயனாளி முதல் தெரிவில் உள்வாங்கப்பட்டமைக்கான காரணமாக அமைகின்றது.
இவ்விடயத்தினைப் பாராட்டிக் கெளரவிக்குமுகமாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவினால் (21) சம்மாந்துறை பிரதேச செயலக ஊழியர் நலனோம்பல் அமைப்பினால் நடத்தப்பட்ட நிகழ்வின் போது வைத்து மெச்சுறைப் பத்திரம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
மேலும், இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதுவரை அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்களுக்குள் முன்மாதிரியாகவும் எவ்விதமான முறைப்பாடுகளுமற்ற, மூவின மக்களையும் இணைத்து நேர்மையான முறையில் சேவையாற்றுகின்ற செயற்றிறன்மிக்க பிரதேச செயலாளர் என்றால் அது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா எனக்குறிப்பிட்டார்.
அத்தோடு, கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி அனீஸ், பிரதம கணக்காளர் ஏ.எல்.ஆதம்பாவா, பிரதம பொறியியலாளர் ஏ.பி சாஹீர், மாவட்ட உள்ளக பிரதம கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் சம்மாந்துறை பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.