Ads Area

இதுதான் நட்புக்கு மரியாதை - வவுனியாவில் நண்பனின் கனவை நனவாக்கும் நண்பர் வட்டம்.

கடந்த 1999ம் ஆண்டு வவுனியா குருமன்காடு சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட 1999 ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவன் ரமேஷ்கண்ணா அவர்களின் 25வது நினைவேந்தல் தினம் அவர்களது நண்பர்களால் 08.02.2024 அன்று அனுஷ்டிக்கப்பட்டது.


ரமேஷ் கண்ணா அவர்களின் நண்பர்கள் அவரது இறப்பிற்கு பின்னர் அவரது கல்வியை தொடரமுடியாமல் போனைதையிட்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு அவர் நினைவாக பல்தரப்பட்ட கல்விக்கான உதவித்திட்டங்களை அவரது பெயரில் ரமேஷ்கண்ணா நற்பணி மன்றம் ஊடாக செய்துவருகின்றனர்.


இதேவேளை அவரது 25வது நினைவேந்தலை முன்னிட்டு வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலத்திற்கு மாணவர்களின் தேவைக்காக 5 கணணிகள் கொண்ட தொழில்நுட்ப தொகுதி ஒன்றினை அமைத்து கொடுத்துள்ளனர்.


இந்நிகழ்வில் ரமேஷ்கண்ணா நற்பனி மன்றத்தின் இலங்கைக்கான தலைவர் லிங்கேஷ்வரன்(லிங்கா), செயலாளர் பிரேமகுமார்(பிரேம்) ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


ரமேஷ்கண்ணா நற்பனிமன்றத்தின் செயல்பாடுகளுக்கான நிதிபங்களிப்பை ரமேஷ் கண்ணாவின் நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோரே மேற்கொண்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கல்வியிலே நீ உயர்ந்து கற்றோர் அவையில் கலந்திருக்க வேண்டுமென்று கனவுகளுடன் காலமான உன்னைக் காப்பாற்ற முடியவில்லை எம்மால்.. ஆனாலும், சமூகப் பணியாற்ற வேண்டுமென்ற உன் கனவை, “ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம்“ ஊடாக நாம் நிறைவேற்றி வைப்போம்.. உனைப் போன்ற மாணவர்களின் கனவு மெய்ப்பட உழைப்போம்! என “ரமேஷ்கண்ணா நண்பர்கள்” குறிப்பிட்டுள்ளனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe