"ஆரோக்கியமான சமூகம் என்பது உடல் ஆரோக்கியம் மட்டும் அல்ல மாறாக உள ஆரோக்கியமும் இணைந்ததே! "
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தெரிவிப்பு!
(சர்ஜுன் லாபீர்)
ஆரோக்கியமான சமூகம் என்பது உடல் மற்றும் உள ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்க வேண்டும். என சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தெரிவித்தார்.
உளசமூக பிரச்சினைகளை குறைப்பதற்கான உளவியல் உளவளத்துனை செயலமர்வு கடந்த புதன்கிழமை(22) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பெண்கள் சார்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்....
உடலளவில் நாங்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றோம் அதிலும் தொற்று நோய், தொற்றா நோய் என இரு வகை இருந்தாலும் பார்வையில் நாம் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது போல எல்லோருக்கும் காண்பிக்கின்றோம். ஆனால் உள்ளத்திற்குள் இருக்கின்ற பிரச்சினைகளை மறைத்துக் கொண்டு வாழ்வதனால்தான் நாம் அதிகமான தொற்றா நோய்களுக்கு உள்ளாகின்றோம்.
உள்ளத்திற்குள் நிறைய கவலைகளையும்,கஸ்டங்களையும் மறைத்துக்கொண்டு அதிகமான யோசனைகளோடு வாழ்கின்றதனால்தான் உயர் இரத்த அழுத்தம்,மாரடைப்பு,மனநல பாதிப்பு போன்ற பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகின்றது.
முறையான உணவுப் பழக்க வழக்கங்கள்,முறையான வாழ்க்கை முறைகள் நம்மில் இல்லாததனால் நாம் நோய்களை தேடிக் கொள்கின்றோம். இதற்காக அரசாங்கம் சுகாதார துறைக்கு அதிகளவிலான தொகையை செய்கின்றது.அதேபோன்று எமது தனி நபர் வருமானத்திலும் அதிகமான தொகை ஆரோக்கியத்திற்காக செலவு செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, சுகாதார சீர்கேடுகளையும் இவ் உளப் பாதிப்புக்கள் எமக்கு ஏற்படுத்துகின்றது.எனவே இவற்றை நாம் அடையாளம் காண வேண்டும்.
குறிப்பாக தங்களிடையே காணப்படுகின்ற பிரச்சினைகளை முதலில் இணங்காண வேண்டும். அதுபோல் சமூக மட்ட பிரதிநிதிகள், தலைவர்கள் குறித்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை இணங்கண்டு அவற்குக்கான தகுந்த தீர்வுகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.
உளவளம் சார்ந்த பிரச்சினைகளை சமூக மட்ட தலைவர்கள்,பிரதி நிதிகள்முறையாக அனுகி அதனை குறுகிய,நீண்ட கால அடிப்படையில் தீர்ப்பதற்கான வழிமுறைகளை அறிந்து இருக்க வேண்டும்.
உள வள ஆலோசனைகளை சமூக மட்டத்திற்கு கொண்டு சென்று உள நோய்களை குறைத்து சமூக மேம்பாட்டுக்கும்,முன்னேற்றத்திற்கும்ஒத்துழைப்பு வழங்குவது சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் கடமையாகும் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கணக்காளர் எஸ்.எல்.சர்தார் மிர்ஸா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எல்.ஐ கபீர்,அம்பரை மாவட்ட உளவள ஆலோசகர் மனூஸ் அபூவக்கர்,சமூக சேவைப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,ஆகியோர் கலந்து கொண்டனர்.