மெடிக்கல் வோர்டில் இருந்து, ஒரு பேஷன்ட்டைப் பார்க்குமாறு எனக்கு எழுதி இருந்தார்கள். என்ன பிரச்சின? எனப் கேட்ட போது, பெனடோல் குளிசையை அள்ளிப்போட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்த பேஷன்ட் என்றார்கள். நமக்கு என்னத்துக்கு இந்த பேஷன்ட்ட அனுப்புறாக என எண்ணிக் கொண்டே, அவரை கிளினிக்கிற்கு அனுப்பச் சொன்னேன்.
ஒரு இளைஞர், தட்டுத் தடுமாறி, வயதான தனது தந்தையின் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்தார்.
“எத்தன வயசு?”
“28”
“என்ன பிரச்சின?”
“10 வருஷத்துக்கு முதல் பைக்ல எக்சிடன்ட் பட்ட. அதுக்குப் பிறகுதான் இப்பிடி”
அவருடைய பழைய பைல்களை பார்த்த போது…
மோட்டார் சைக்கிளில் எக்சிடன்ட் ஆகி இருக்கிறது, கழுத்தில் இரண்டு எலும்புகள் உடைய, அந்த உடைவு பின்னாலுள்ள, முண்ணானை (spinal cord) தாக்க, கழுத்துக்கு கீழே எந்த ஒரு இயக்கமும் இல்லாமல் போய் இருக்கிறது.
“எக்சிடன்ட் பட்ட பிறகு, படுத்த படுக்கையா எவ்வளவு காலம் இருந்த?”
“3 வருஷம்”
“இப்ப கொஞ்சம் நடக்க ஏலும்தானே?”
“ஓம், ராகமையிலயும் இங்க அம்பாறையிலயும் பிஸியோதிரபி செஞ்ச”
“அப்ப ஏன் சாகுறதுக்கு பெனடோல குடிச்ச?”
கீழே பார்த்துக் கொண்டிருந்தார்.
“வாழ்க்க வாணா என்டு பெய்த்து சேர்”
சட்டென்று தந்தையை பார்த்தேன். கண்ணீரை அடக்க முடியாமல், ஜன்னலூடாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.
எனக்கு 5 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது. (இதை எழுதியும் உள்ளேன்).
கால் எலும்பு உடைந்து, கால் கழட்ட வேண்டிய நிலையில் வந்த, 20 வயதான் ஒரு இளைஞனின் காலை, மிகவும் கஷ்டப்பட்டு, பல சேர்ஜரிகள் செய்து காப்பாற்றினோம்.
பல மாதங்களாக அவரும அவருடைய தந்தையும் எங்களது வார்ட்டிலே இருந்தார்கள். கடைசியாக ஒரு சேர்ஜரி இருந்தது.
“சேர், இந்த சேர்ஜரிக்கு முதல், ஊட்ட கொஞ்சம் போயிட்டு வாரன்” எனக் கேட்க, மாசக் கணக்கா கிடக்கானே என, “சரி போயிட்டு, சேர்ஜரிக்கு முதல் நாள் வாங்க” என அனுப்பினோம்.
சேர்ஜரிக்கு முதல் நாள் தந்தை வந்தார்.
“எங்க மகன்?”
“தூக்கு போட்டு செத்துப் போயிட்டான் சேர்”
தந்தைகளால் வளர்க்கப்படாமல், தானாக வளரும் இளைஞர்களுக்கு, அத்தியாவசியமாக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்கும் தந்தைமாருக்கு.
Dr Ahamed Nihaj
MBBS, MD-Ortho, DSICOT, FEBOT, FRCSEd (Tra & Ortho), FRCS (Eng)
Consultant Orthopaedic surgeon