கை கழுவுதலின் அவசியத்தினை வலியுறுத்தியும் பொதுமக்களை விழிப்பூட்டும் நோக்கிலும் இம்மாதம் 24 முதல் 29ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியினை பிராந்திய கை கழுவுதல் விழிப்புணர்வு வாரமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் பிரகடனப்படுத்தப்பட்டதனையடுத்து சம்மாந்துறை பிரதேசத்திலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபாவின் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (25) சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.எல்.எம். கபீர் அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கருத்தரங்கினை நிகழ்த்தினார்.
இதன்போது சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கை கழுவுதலின் அவசியம் குறித்தும் கை கழுவ வேண்டிய சந்தர்ப்பங்கள் பற்றியும்,சுகாதார பழக்கவழக்கங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகள் சார்ந்த பல்வேறுபட்ட விடயங்களை தெளிவுபடுத்தினர்.
இந் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம் பஸ்லான்,சுகாதார பரிசோதகர்களான எம்.டி நஸார்,எம்.ஐ.எம் ஹனீபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.