ஆசனவாயிலிலும் பயணப் பொதிகளிலும் சுமார் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 06 இலங்கையர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கல்முனை, மூதூர், கொழும்பு-10, கலகெடிஹேன மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன் போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது இவர்களிடம் தங்க ஜெல் உருண்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களில் 4 பேர் ஆசனவாயிலில் தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்திருந்ததாகவும் மேலும் இருவர் 08 கிலோ 632 கிராம் எடையுள்ள 22 தங்க ஜெல் உருண்டைகளை பயணப்பொதிகளில் மறைத்து வைத்திருந்ததாகவும் விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதானவர்கள் இன்று புதன்கிழமை (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks - Virakesary