Ads Area

தமிழ்ப்பேசும் மக்களின் தலைமகனின் இழப்பு பேரிழப்பாகும் : ஹரீஸ் எம்.பி இரங்கல்.

 நூருல் ஹுதா உமர் 


இலங்கை அரசியலில் இருந்த மூத்த சிறுபான்மைத் தலைவர், தமிழ் மக்களின் ஆணி வேராக நோக்கப்படும் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சட்டத்தரணி இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானதாக அறிந்து மிகவும் கவலையடைந்தேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். 


அவரது அனுதாபச்செய்தியில், 


சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான அவர் கடந்த 2015 செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப்பதவி வகித்து தமிழர்களின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியாகப் போராடிய மூத்த தலைவராக நோக்கப்படுகிறார். 


எனது சமூகம் சார்ந்த பிரச்சினைகளின் போதும், சிறுபான்மை மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளின் போதும் அவருடன் நேருக்கு நேராகவும் தோளோடு தோளாகவும் நின்ற நாட்கள் ஏராளம். தன்னைச்சார்ந்த இனத்தின் உரிமைகளுக்காக விட்டுக்கொடுப்புக்களோ அல்லது தளர்வுகளோ இல்லாது போராடிய தலைமையை இன்று தமிழ் மக்கள் இழந்திருக்கிறார்கள் என்பதை விட அனுபவமும் ஆற்றலும் கொண்ட சிரேஷ்ட அரசியல் ஆளுமையை இலங்கை தேசம் இழந்திருக்கிறது என்பதே உண்மை. 


சம்பந்தன் ஐயா அவர்களின் நல்ல குணவியல்வுகளை பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் சிலாகித்துப் பேசியதை நாங்கள் நேரடியாகக் கேட்டிருக்கிறோம். பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் மதித்த ஒரு தலைவராக சம்பந்தன் ஐயா திகழ்கிறார்கள். 


நான் கல்முனை மாநகர முதல்வராக 2010 காலப்பகுதியில் இருந்த போது சம்பந்தன் ஐயா அவர்களுக்கு பெரியளவிலான வரவேற்பொன்றை அளித்து ஆயிரக்கணக்கான கல்முனை மக்கள் முன்னிலையில் தமிழ்ப்பேசும் மக்களின் தலைமகன் ஏற்ற விருதை வழங்கிக்கௌரவித்த பொழுதுகளை இச்சந்தர்ப்பத்தில் நினைத்து பார்க்கிறேன். 


தம்பி ஹரிஸ், சிறுபான்மைச்சமூகமான நாங்கள் பிரிந்து விடக்கூடாதென பாராளுமன்றத்தில் அடிக்கடி என்னிடம் கூறி வந்த அவர், சிறுபான்மைச்சமூகம் ஒன்றிணைந்து தான் அதிகாரப்பகிர்வு, முஸ்லிம் சமூகத்தின் அரசியலதிகாரம், உரிமைகளை பரஸ்பரமாக விட்டுக்கொடுப்புடன் வெல்ல வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி கூறி வந்தார். 


முஸ்லிம்களின் அபிலாசைகளையும், சிங்கள மக்களின் உணர்வுகளையும் மதித்த ஒரு தமிழ் தலைமை சம்பந்தன் ஐயா. இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. 


சர்வதேச அங்கீகாரத்தைப்பெற்ற சிரேஷ்ட அரசியல் தலைமையான அவரின் காலத்திலையே இனப்பிரச்சினைக்குத்தீர்வு வருமென்று நாங்கள் நம்பியிருந்தோம். இவரின் இழப்பினால் தீர்வு சம்பந்தமான இலக்கினை எவ்வாறு அடைய முடியும் என்ற கேள்வி எழுகிறது. 


இருந்தாலும் தான் சார்ந்த தமிழ்ச்சமூகத்திற்கு  அவர் செய்த சேவைகள், பங்களிப்புக்கள் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


அவரது இழப்பினால் துயருற்ற அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள், நண்பர்கள், இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் எனது அனுதாபங்களையும், ஆறுதல்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe